background img

புதிய வரவு

சென்னையில் விண்ணை தொடும் வெற்றி! * யுவராஜ் சதத்தில் இந்தியா அபாரம் * பரிதாபமாக வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யுவராஜ் சிங்கின் அதிரடி சதம், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.
அஷ்வின் வாய்ப்பு:
இந்திய அணியில் காயம் அடைந்த சேவக், நெஹ்ரா நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கீமர் ரோச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கிர்க் எட்வர்டஸ், ரவி ராம்பால் இடம் பெற்றனர். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
ராம்பால் அசத்தல்:
இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(2), ரவி ராம்பால் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். பென் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் காம்பிர். இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் காம்பிரும்(22)வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு கோஹ்லி அருமையாக "கம்பெனி கொடுக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த யுவராஜ், மிகவிரைவாக அதிரடிக்கு மாறினார். பிஷூ ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து பென் ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜுடன் சேர்ந்து 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் விராத் கோஹ்லி(59) போல்டானார்.
முதல் சதம்:
பின் போலார்டு வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுத்த, யுவராஜ், உலக கோப்பை அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 13வது சதம். மறுபக்கம் பிஷூ பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட, தோனி(22) வீணாக அவுட்டானார்.
இதற்கு பின் இந்திய விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சமி வீசிய போட்டியின் 44வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ராம்பாலின் சூப்பர் "கேட்ச்சில் ரெய்னா(4) அவுட்டானார். இதன் மூலம் கிடைத்த அரிய வாய்ப்பை இவர் வீணாக்கினார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் அவரிடேம "கேட்ச் கொடுத்து யுவராஜ் வெளியேறினார். இவர் 113 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ராம்பாலிடம் "சரண்டர் ஆன யூசுப் பதான்(11) மீண்டும் சொதப்பினார். ஹர்பஜன்(3) தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் கானை(5) போல்டாக்கிய ராம்பால், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முனாப்(1) வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராம்பால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் "ஸ்பின்:
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய கேப்டன் தோனி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் ஓவரை வீச தமிழக "ஸ்பின்னர் அஷ்வினை அழைத்தார். இதில், ஒரு ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். எட்வர்ட்ஸ் 17 ரன்களுக்கு "ரிவியு முறையில் அஷ்வின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ(22) தாக்குப்பிடிக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவன் ஸ்மித்(81), ஜாகிர் பந்தில் போல்டாக, சிக்கல் ஆரம்பமானது.
விக்கெட் மடமட:
இதற்கு பின் வந்தவர்கள் இந்திய பந்துவீச்சில் திணறினர். "அதிரடி போலார்டு(1), ஹர்பஜன் வலையில் விழுந்தார். யுவராஜ் பந்தில் டேவன் தாமஸ்(2) நடையை கட்டினார். சமி(2) ரன் அவுட்டானார். "டெயிலெண்டர்கள் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 188 ரன்களுக்கு அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
"ஆல்-ரவுண்டராக அசத்திய யுவராஜ் மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
50 ஓவர் தெரியுமா?
உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து (49.5 ஓவர்கள்), தென் ஆப்ரிக்கா (48.4 ஓவர்கள்), வெஸ்ட் இண்டீஸ் (49.1 ஓவர்கள்) அணிகளுக்கு எதிராக விரைவில் "ஆல்-அவுட் ஆனது. ஒருவேளை இந்திய அணியினருக்கு 50 ஓவர் போட்டி என்பது மறந்து போச்சா?
---
கடைசி கட்ட சொதப்பல்
<இம்முறை உலக கோப்பை தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் சொதப்பலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக "பேட்டிங் பவர்பிளே ஓவரில், விக்கெட்டுகளை "மடமட என பறிகொடுக்கின்றனர். வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து (33 ரன்களுக்கு 5 விக்கெட்), தென் ஆப்ரிக்கா (29 ரன்களுக்கு 9 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (50 ரன்களுக்கு 7 விக்கெட்) அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் எதிரணி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கினர்.
---
சங்ககரா முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்த நிலையில் இலங்கை கேப்டன் சங்ககரா, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சங்ககரா (இலங்கை) 6 363 1/2
டிராட் (இங்கிலாந்து) 6 336 0/4
ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 6 329 1/1
சேவக் (இந்தியா) 5 327 1/1
சச்சின் (இந்தியா) 6 326 2/0
---
"சுழல் மன்னன் அப்ரிதி
லீக் சுற்று முடிந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சுழலில் அசத்திய இவர், 6 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
அப்ரிதி (பாக்.,) 6 17
ஜாகிர் (இந்தியா) 6 15
ராபின் பீட்டர்சன் (தெ.ஆ.,) 6 14
சவுத்தி (நியூசி.,) 6 14
ரோச் (வெ.இ.,) 5 13
---
இந்தியா "370
லீக் சுற்று முடிந்த நிலையில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.
இவ்வரிசையில் "டாப்-5 அணிகள்:
அணி ஸ்கோர் எதிரணி
இந்தியா 370/4 வங்கதேசம்
நியூசி., 358/6 கனடா
தெ.ஆ., 351/5 நெதர்லாந்து
இந்தியா 338 இங்கிலாந்து
இங்கிலாந்து 338/8 இந்தியா

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts