background img

புதிய வரவு

மத்தியஅரசில் இருந்து தி.மு.க., விலகல்: நெருக்கடி தந்த காங்கிரசுக்கு பதிலடி


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க., நேற்று அறிவித்தது. பிரச்னைகளின் அடிப்படையில், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்படும் என்று முடிவு எடுத்தது. இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான ஏழாண்டு உறவு முறிந்தது.

தமிழகத்தில், அடுத்த மாதம், 13ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு விவகாரங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க., கூட்டணியைப் பொறுத்தவரை, கடைசியாக, தே.மு.தி.க., இணைந்து, அந்தக் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மற்ற தோழமைக் கட்சிளுடன் பேச்சு நடக்கிறது.தி.மு.க., கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகளுடனான, "சீட்' பேரம் முடிந்து விட்டது. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் மட்டுமே இழுபறி நீடித்தது. காங்கிரஸ் ஐவர் குழு மற்றும் தி.மு.க., குழுவினர் இடையே, மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த பின், இறுதியாக, 60 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., ஒப்புக் கொண்டது.முதலில் அதற்கு சம்மதம் தெரிவித்த காங்கிரஸ், பின்னர் முடிவை மாற்றி, 63 தொகுதி வேண்டும் என, அடம் பிடித்தது. மேலும், அந்த 63 தொகுதிகளும் தாங்கள் கேட்கும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

காங்கிரசின் இந்த நிபந்தனைகளை தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. பொறுமை காத்து வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவில், கண்டிப்புடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "காங்கிரஸ் தரப்பினர் கோருவது நியாயமானதா?' என்று கேள்வி எழுப்பி, "தி.மு.க., உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான கூட்டணி தொடருமா அல்லது முறியுமா என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இந்தத் தருணத்தில், நேற்று முற்பகலில், டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""அரசியல் ரீதியான எங்களின் உறவுகளில் சில நேரங்களில், பிரச்னைகள் ஏற்படும். பிரச்னையை உருவாக்கும் திறமையும், அதேநேரத்தில், அதை தீர்க்கும் திறமையும் எங்களுக்கு உண்டு,'' என்றார்.

அதேபோல், தமிழக காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத், நிருபர்களிடம் கூறுகையில், ""தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்படாது என நம்புகிறோம். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படும். தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்ளவே காங்கிரஸ் விரும்புகிறது,'' என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை, சென்னை தி.மு.க., தலைமையகத்தில் நடந்த அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட சிலரை, தி.மு.க., தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். காங்கிரசின் பிடிவாதப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், மத்தியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., விலகுவது; பிரச்னைகளின் அடிப்படையில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான விவரம் வருமாறு:எதிர் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வும், காங்கிரசும் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், உடன்பாடு காண முடியவில்லை. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை, 60 இடங்கள் கேட்டு, அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்ட பிறகு, தற்போது, 63 இடங்கள் வேண்டும் என்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பர் என்பதும், இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க., தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து, மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இடம் பெற விரும்பாமல், தி.மு.க., தன்னை விடுவித்துக் கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்துள்ளது.முதல்வர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் அழகிரி உட்பட, 28 பேர் கலந்து கொண்டனர்.தி.மு.க.,வின் அறிவிப்பை அடுத்து, கடந்த ஏழாண்டு காலமாக அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்த உறவு முறிந்துள்ளது.

விலகல் ஏன்?தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:மத்திய அரசிலிருந்து எங்கள் மந்திரிகள் ராஜினாமா செய்வது, வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி தந்ததது. தொகுதிப் பங்கீடு குறித்து, காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த அகமது படேல் மற்றும் அமைச்சர் அந்தோணி ஆகியோருக்கு தெரிவித்திருக்கிறோம். காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டு பிரச்னையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இம்முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

தி.மு.க., தற்போது எடுத்த முடிவால் மத்திய அரசுக்கு பாதிப்பு ஏற்படாது. காரணம், பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு தரப்படும் என்று தெரிவித்திருப்பதாலும், மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கவிருப்பதாலும், மத்திய அரசுக்கு பாதிப்பு இருக்காது. தி.மு.க.,வுக்கு தற்போது, 18 எம்.பிக்கள் உள்ளனர். மத்திய கேபினட் அமைச்சர்களாக இருவர் மற்றும் இணை அமைச்சர்களாக நான்கு பேரும் உள்ளனர். இனி, ஐ.மு.கூ., அணி பலம், 256 ஆக, லோக்சபாவில் இருக்கும்; பெரும்பான்மை என்பது, 273 இடங்கள்; இருந்த போதும், மத்திய அரசு சுலபமாக சமாளிக்கும்.

தி.மு.க., அமைச்சர்கள் நாளை டில்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்கள், நாளை டில்லி செல்கின்றனர். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தங்களின் ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். தி.மு.க., சார்பில் மு.க.அழகிரி உட்பட இருவர் கேபினட் அமைச்சர்களாகவும், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts