background img

புதிய வரவு

குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க லிபியா அதிபர் கடாபி பாதாள அறையில் பதுங்கல்

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்.

எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது ஏவுகணைகளும், குண்டுகளும் வீசப்பட்டன. இதில், அவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. ஆனால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வீடு அருகே தான் ராணுவ வீரர்களின் குடியிருப்பும் உள்ளது.

குண்டு வீச்சின் போது அவரது வீட்டின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இதற்கிடையே போராட்டக்காரர்கள் கைவசம் இருந்த அஜ்தாபியா, மிஸ்ரதா, ரஸ்லனுப் ஆகிய 3 முக்கிய நகரங்களை கடாபியின் ராணுவம் பிடித்தது.

பெரிய நகரமான பெங்காசியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் அங்கு ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜ்தாபியில் இருந்து ராணுவத்தினரை விரட்ட அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு தாக்குதல் நடத்தின. அங்குள்ள ராணுவ நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசப்பட்டது.

இதனால் ராணுவம் நிலை குலைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகள் தூள் தூளாகி தீப்பிடித்து எரிகின்றன. இதையொட்டி ஏற்கனவே அஜ்தாபியில் இருந்து பெங்காசியை நோக்கி முன்னேறியிருந்த கடாபியின் ராணுவம் சுமார் 100 கி.மீட்டர் தூரத்துக்கு பின் வாங்கி ஓட்டம் பிடித்தது.

இருந்தும் அப்பகுதியில் மீதமுள்ள ராணுவ நிலைகள், டாங்கிகள் மீது தொடர்ந்து குண்டு வீச்சு நடந்து வருகிறது. அப்பகுதியில் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசுவதால் போராட்டக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

இதற்கிடையே, குண்டு வீச்சில் உயிர் தப்பிய கடாபி எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. திரி போலியை ஒட்டியுள்ள பாப்-அல்-அஷியா நகரில் உள்ள தனது மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவரது வீடு மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

தற்போது அவர் ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பான பாதாள அறையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லிபியா மீது அமெரிக்கா கூட்டுபடைகளின் குண்டு வீச்சுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை விமானம் பறக்க தடை விதித்துள்ள பகுதியில் பறந்து குண்டு வீசுவதாக விமர்சனம் செய்துள்ளது.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் எகிப்து சென்றுள்ளார். அங்கு போராட்டம் நடந்த தக்ரீர் மைதானத்தை பார்வையிட சென்றிருந்தார். அப்போது லிபியா அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு அவரை முற்றுகையிட்டனர்.

கையில் லிபியா நாட்டு கொடியுடன் வந்திருந்த அவர்கள் லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்கா ஒழிக என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பான்கிமூனும், ஐ.நா. துணை பொதுச் செயலாளரும், சிலி முன்னாள் அதிபருமான மிச்செலி பசெலெட் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts