background img

புதிய வரவு

தி.மு.க., விலகினாலும் ஆபத்தில்லை : முழு ஆதரவு தருகிறார் முலாயம்

லக்னோ : "மத்திய அரசிலிருந்து, தி.மு.க., விலகினாலும், அரசுக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது. சமாஜ்வாடி கட்சி, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்' என, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார். தமிழக சட்டசபை தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா என, சமாஜ்வாடி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவிடம், லக்னோவில் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில்:மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகுவதால், மத்திய அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சிறுபான்மை அரசு அல்ல. சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, சமாஜ்வாடி கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். மத்திய அமைச்சரவையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்குமா என்பது குறித்த யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு, தற்போது பதில் அளிக்க முடியாது. இதுகுறித்து, மத்திய அரசுடன், நாங்கள் எந்தவித பேச்சும் நடத்தவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிகளை பங்கிடுவதில், தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கருத்துவேறுபாட்டை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இதை முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக கருத முடியாது. தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா, இல்லையா என்பது குறித்து கூற முடியாது. கூட்டணி அரசில், இதெல்லாம் வழக்கமாக நடக்கக் கூடிய விஷயம் தான்.
மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங், என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது லோக்சபா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என, அவர் தெரிவித்தார். இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார்.
இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் மோகன் சிங் நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வை, கடந்த 1980லிருந்தே கவனித்து வருகிறேன். கடினமாக பேரம் பேசும், சாதித்துக் கொள்ளும் கட்சிகளில், அதுவும் ஒன்று. எனவே, இன்னும் சில நாட்களில் இரு தரப்புக்கும் இடையே, சுமுகமான முடிவு எட்டப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில், நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக வேடிக்கை பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறோம். அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு மோகன் சிங் கூறினார்.
அரசுக்கு ஆபத்து இல்லை : டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, தி.மு.க.,வையும் சேர்த்து, 260 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. லோக்சபாவில் பெரும்பான்மை பெறுவதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க., தனது ஆதரவை விலக்கிக் கொண்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 242 ஆக குறையும். ஆனாலும், சமாஜ்வாடி (22), பகுஜன் சமாஜ் (21), ராஷ்டிரிய ஜனதா தளம் (4), மதச் சார்பற்ற ஜனதா தளம் (3) ஆகிய கட்சிகள், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றன. எனவே, மத்திய அரசுக்கு தற்போது எந்த ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts