background img

புதிய வரவு

41 தொகுதிகளில் போட்டியிட 7,000 பேர் விருப்பமனு : தே.மு.தி.க.,வில் விறுவிறுப்பு; ஒருநாள் நீட்டிப்பு

தே.மு.தி.க., சார்பில், 41 தொகுதிகளில் போட்டியிட, இதுவரை, 7,000 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், 6 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலானது. இந்நிலையில், விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகள் அடங்கிய பட்டிலை கொடுத்துள்ளார். அந்தப்பட்டியலில் இருந்து, 41 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. இருகட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு குழுவினரும், விரைவில் சந்தித்து பேசி தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வர் என தெரிகிறது.
இதற்கிடையே, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் வாங்குவது, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் நாளில், 1,500 பேர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்து விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் விருப்பமனு தாக்கல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று, ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விருப்பமனுக்களை தாக்கல் செய்ய வந்தனர்.
இதனால், வடபழனி - திருமங்கலம் இடையிலான நூறடிச்சாலை, கோயம்பேடு - அமைந்தகரை இடையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கட்சியினர் வந்த வாகனங்கள் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. கட்சியினர் பேண்டு, வாத்தியங்கள் முழங்க குத்தாட்டம் போட்டுச் சென்று விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரகுமார் அடங்கிய குழுவினர் பெற்றுக்கொண்டனர். நேற்றைய நிலவரப்படி, கடந்த ஐந்து நாட்களில், இதுவரை, 7,002 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவற்றில், பொதுத் தொகுதிகளுக்கு 6,300 பேரும், தனித் தொகுதிகளுக்கு 702 பேரும் மனு செய்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிட, 6,300 பேர், தலா 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 6 கோடியே 30 லட்சம் ரூபாய், தனித்தொகுதிகளில் போட்டியிட, 702 பேர் தலா, 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.
இதன் மூலம், தே.மு.தி.க., தேர்தல் நிதியாக, 6 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதற்கிடையே, விருப்ப மனு தாக்கல் தேதியை இன்று(7ம் தேதி) ஒருநாள் வரை நீட்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடைசி நாளான இன்று விருப்ப மனு தாக்கல், 10 ஆயிரத்தை நெருங்கும் என, தே.மு.தி.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
9ம் தேதி நேர்காணல்: விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலை வரும் 9ம் தேதி துவக்க தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது. 13ம் தேதி வரை நேர்காணல் நடக்கும் என தெரிகிறது. நேர்காணலில் பங்கேற்க வருபவர்களிடம் எழுப்பவேண்டிய கேள்விகளை தயாரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரகசியமாக வைத்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts