background img

புதிய வரவு

பதவிக்கு மட்டும் ஆசை; "பிரெசென்ட்' ஆக மனசில்லை!

ஐந்து ஆண்டுகளில், சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை பொறுத்தவரை, விஜயகாந்த், என்.கே.கே.பி.ராஜா, ஜெயலலிதா ஆகியோர் மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, நுழைவாயிலில் வருகைப் பதிவேடு வைக்கப்படும். அதில் கையெழுத்திட்டுச் செல்வர். அவ்வாறு கையெழுத்து போடுபவர்களுக்கு தான், கூட்டத்தில் கலந்து கொண்டதற்கான படி வழங்கப்படும். சில எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள், சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்றும் குறிப்பிட்டு, வருகையை குறிப்பிட்ட தேதிகளில் பதிவு செய்து கொள்ளும்படி, சபாநாயகருக்கு கடிதம் கொடுப்பர். இதன் பேரில், வருகை பதிவு செய்யும் வசதியும் உள்ளது.சிலர் நேராக வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியே சென்றுவிடுவர். இதுதவிர, முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை பொறுத்தவரை, அவர்கள் தினமும் சபைக்கு வர வேண்டுமென்பதால், அவர்களுக்கு வருகைப் பதிவேடு இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக சட்டசபை 225 நாட்கள் கூடியுள்ளது. இதில்,100 சதவீத வருகை புரிந்தவர்கள், அங்கயற்கண்ணி, சபா.ராஜேந்திரன், உதயசூரியன், அய்யப்பன், கண்ணன், வி.எஸ்.பாபு, காமராஜ், சுந்தர், ரங்கநாதன், விடியல் சேகர், ஜான் ஜேக்கப் ஆகியோர் மட்டுமே. மிகக் குறைந்தளவு வருகை புரிந்தவர்களில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார். இவர் பத்து நாட்கள் மட்டுமே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அதுவும், புதிய சட்டசபை துவக்கப்பட்ட பின், அதற்கு அவர் வரவே இல்லை.

இதேபோல, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 53 நாட்கள் சட்டசபைக்கு வந்துள்ளார். தி.மு.க.,வினரை பொறுத்தவரை, அமைச்சர் பதவி போன பிறகு, என்.கே.கே.பி.ராஜா, 33 நாட்கள் மட்டுமே சட்டசபைக்கு வந்துள்ளார். இவர்களைத் தவிர, பதவியை ராஜினாமா செய்தவர்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், மறைந்த எம்.எல்.ஏ.,க்கள் போன்றோர் மட்டுமே நூறு நாட்களுக்கும் குறைவாக சபைக்கு வந்துள்ளனர்.

மற்றவர்களில், காரைக்குடி ந.சுந்தரம் 122 நாட்களும், மங்களூர் தொகுதி செல்வப் பெருந்தகை 130 நாட்களும், நாங்குநேரி வசந்தகுமார் 145 நாட்களும், நத்தம் விஸ்வநாதன் 169 நாட்களும், ஓசூர் கோபிநாத் 156 நாட்களும், திண்டிவனம் சி.வி.சண்முகம் 161 நாட்களும் வருகை தந்துள்ளனர்.அமைச்சர்களாக இல்லாத காலங்களில், பூங்கோதை 14 நாட்களும், பொங்கலூர் பழனிசாமி 31 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் பதில் பெறுவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சட்டசபையில் பங்கேற்க, இவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும், "சீட்' கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும், எத்தனை பேர் மீண்டும் வெற்றி பெற்று சபைக்கு திரும்புவர் என்ற கேள்விக்கு, மே மாதம் 13ம் தேதி விடை தெரியும்.

நிறைவேறாத மசோதாக்கள் : இந்த சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மசோதாக்கள் கடைசி வரை நிறைவேற்றப்படவில்லை.கடந்த 2008ம் ஆண்டு, தமிழ்நாடு போலீஸ் சட்ட மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டில், கோவை பி.எஸ்.ஜி., பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைக்க, சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படாமல் ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களும், சட்டசபைக் காலம் முடியும் வரை நிறைவேற்றப்படவில்லை. எனினும், 235 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts