background img

புதிய வரவு

7 ஆண்டு தி.மு.க., - காங்., கூட்டணி உடைந்ததற்கு யார் காரணம்? : விபரீதத்தில் முடிந்த போட்டா போட்டி

தமிழக சட்டசபை தேர்தலைப் பற்றிய பேச்சு எழுந்ததுமே, "காங்கிரசுக்கு, 90 தொகுதிகள்; கூட்டணி ஆட்சி' என்ற கோஷங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக முதல்வர் கருணாநிதி நேரடியாக களமிறங்கி, சோனியாவை சந்தித்தார். ஆனால், சந்திப்புக்கு முன், கூட்டணியில், பா.ம.க., இருப்பதாக ஒரு வெடியை கொளுத்திப் போட்டார்.
காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்க, தி.மு.க., தலைவர் செய்த இந்த தந்திரத்தை அக்கட்சி ரசிக்கவில்லை. அதன் எதிரொலி, சோனியாவுடனான சந்திப்பில் கேட்டது. "தொகுதிப் பங்கீடு குறித்து பேச, இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும்' என்ற அதிர்ச்சி பதிலோடு தமிழகம் திரும்பினார் கருணாநிதி.
அடுத்த கட்டமாய் ஐவர் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை துவங்கியது. "கூடுதல் தொகுதிகள்; கூட்டணி ஆட்சி; குறைந்தபட்ச செயல் திட்டம்' என்ற டில்லியின் குரலை ஐவர் குழு பிரதிபலித்தது. இந்த கோரிக்கையை வலுவிலக்கச் செய்யும் வகையில், திருமண பத்திரிகை கொடுக்க வந்த பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, 31 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தி.மு.க.,
அடுத்தடுத்த கட்டமாய் ஐவர் குழு பேசிக் கொண்டே இருக்க, விடுதலை சிறுத்தைகளுக்கு, 10 தொகுதிகள், குட்டிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு என, தி.மு.க., மறுபுறம், கையிருப்பு தொகுதிகளை குறைத்துக் கொண்டே வந்தது.
ஐவர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய போது, காங்கிரசை மட்டம் தட்டும் வகையில் எழுந்த, "கமென்ட்'களை தி.மு.க., தரப்பு எழுப்பியது. "நமது நம்பிக்கைக்குரிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தானே' என்று ஜாலியாக அடித்த, "கமென்ட்'டுகளை, குற்றச்சாட்டுகளாக, டில்லியில் பதிவு செய்தது ஐவர் குழு.
கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட, 48 தொகுதிகளில் துவங்கி, 51, 53, 55, 57 என காங்கிரசின் கோரிக்கை, "கிராப்' உயர்ந்து கொண்டே போக, குலாம்நபி ஆசாத்துடன் 2ம் தேதி பேசி, முதல் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது. மீண்டும் காங்கிரஸ் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்பதற்காக, கொங்குநாடு மக்கள் கட்சியை அழைத்து, ஏழு தொகுதிகளை கொடுத்து தி.மு.க., வியூகம் வகுத்தது.
ஆனால், டில்லியில் இருந்து, 60 தொகுதிகள் வேண்டும் என்ற அதிர்ச்சித் தகவல் வர, கசப்போடு அதையும் தி.மு.க., ஒப்புக் கொண்டது. அடுத்த சில மணியில் தொகுதி எண்ணிக்கை, 63ஆக உயர்ந்ததோடு, அது எந்த தொகுதிகள் என்பதையும் குறிப்பிட்டால் தான் ஒப்பந்தம் என அடுத்த,"மேசேஜ்' வர, "பொறுத்தது போதும்... பொங்கியெழு' என முடிவு செய்துவிட்டது தி.மு.க.,
காங்கிரஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில், அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள், இங்குள்ள உண்மை நிலவரத்தை, தங்கள் மேலிடத்துக்குச் சொல்லாமல், "எத்தனை தொகுதி வாங்கினாலும், அத்தனையும் லட்டு தான்' என்பதாக உசுப்பேற்றி விட்டனர். உள்ளூரின் உண்மை நிலவரம் என்பதை அறியாத மேலிடமும், "அவ்வளவு கேளுங்கள்; இவ்வளவு கேளுங்கள்' என, ஏற்றிக் கொண்டே வந்தது.
எவ்வளவு இறங்கிச் சென்றாலும், ஏ(ற்)றிக் கொண்டே போகிறதே காங்கிரஸ் என, கடுப்பான தி.மு.க.,வும், ஜாடை மாடையாக, மூக்குடைப்பு வேலைகளை நடத்திக் கொண்டிருந்தது. பேச்சுவ­õர்த்தையின் போது நடந்த நையாண்டியும், அவர்கள் வெளியேறிய கையோடு, கொ.மு.க.,வைக் கூப்பிட்டு வைத்து, ஏழு தொகுதி கொடுத்ததும் இந்த ரகம் தான்.
இப்படி இரு தரப்புமே ஆரம்பம் முதல், "கள்ளன் - போலீஸ்' விளையாட்டு விளையாட, கடைசியில், ஏழு ஆண்டு கூட்டணி, இந்த சட்டசபைத் தேர்தலில் முடிவுக்கும், முறிவுக்கும் வந்திருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts