background img

புதிய வரவு

பழிதீர்க்குமா இந்திய அணி! * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்

நாக்பூர்: உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடைந்த தோல்விக்கு, இன்று இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இன்று நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் "பி' பிரிவு போட்டியில்(பகலிரவு), இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதுவரை அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளை சந்தித்த இந்திய அணி இம்முறை வலிமையான தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.
மிரட்டும் சச்சின்:
உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில், வங்கதேசம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இதன் மூலம் 7 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டமே முக்கிய காரணம். அதிரடி துவக்க வீரர் சேவக், இதுவரை அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து சச்சின் 213, விராத் கோஹ்லி 154 ரன்கள் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சச்சின் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இதே போன்றதொரு ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம்.
யுவராஜ் அபாரம்:
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காம்பிர், இதுவரை 128 ரன்கள் தான் எடுத்துள்ளார். இதனால் இவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா களமிறங்கலாம் என்றும் தெரிகிறது. கேப்டன் தோனியும் (84) சொல்லிக்கொள்ளும் படி ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. மற்றபடி யுவராஜ் சிங் (159) இதுவரை 3 அரைசதம் அடித்து தூள் கிளப்புகிறார். இவரது "அரைசத' ராசி இன்றும் தொடரும் பட்சத்தில் இந்திய அணி மற்றொரு வெற்றியை பெறலாம்.
பவுலிங் ஏமாற்றம்:
பவுலர்கள் தான் சொதப்புகின்றனர். வங்கதேச, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஏமாற்றிய இவர்கள், அயர்லாந்து. நெதர்லாந்துக்கு எதிராக சற்று ஆறுதல் அளித்தனர். ஜாகிர் கான் (11 விக்கெட்), ஆஷிஸ் நெஹ்ரா, முனாப் படேல் (7 விக்.,) உள்ளிட்டோர் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்த திணறுவது ஆச்சரியமாக உள்ளது.
அஷ்வின் வாய்ப்பு:
சுழற்பந்து வீச்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், 4 போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். தோனியின் கடைக்கண் பார்வை பெற்று வரும் பியுஸ் சாவ்லாவுக்கு, இன்று வாய்ப்பு கிடைப்பது கடினமே. இதனால், அஷ்வினுக்கு முதல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அனைவரது எதிர்பார்ப்புக்கு மாற்றாக, "பார்ட் டைம்' பவுலரான யுவராஜ் சிங், சுழலில் அசத்துவது அணிக்கு பெரும் ஆறுதலான விஷயம். இன்று இவருடன் யூசுப் பதானும் இணைந்து ஜொலித்தால் நல்லது.
டிவிலியர்ஸ் அசத்தல்:
தென் ஆப்ரிக்க அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்தை வென்றது. இங்கிலாந்தையும் அடித்து நொறுக்கி விடும் என்று எதிர்பார்த்த நிலையில், 165 ரன்னுக்கு சுருண்டு ஏமாற்றம் தந்தது. அணியில் டிவிலியர்ஸ் (266 ரன்கள்), ஆம்லா (169 ரன்கள்) தவிர, மற்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறுகின்றனர். கேப்டன் ஸ்மித், டுமினி இருவரும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 3 போட்டிகளில் பங்கேற்று 15 ரன்கள் மட்டும் எடுத்துள்ள "ஆல் ரவுண்டர்' காலிஸ், எழுச்சி பெற காத்திருக்கிறார்.
வருவாரா இம்ரான்:
பவுலிங்கில் வேகப்பந்து வீச்சு "வேதாளங்கள்' ஸ்டைன், மார்கல் இருந்தாலும், சுழலில் இம்ரான் தாகிர் அபார எழுச்சி பெற்றுள்ளார். இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரது இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது பின்னடைவான விஷயம். காயத்தை பொருட்படுத்தாது இன்றைய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. இவர் இடம் பெறாவிட்டால், ஜோகன் போத்தா வாய்ப்பு பெறுவார். ராபின் பீட்டர்சன், டுமினி ஆகியோரின் அசத்தலான சுழலில் இந்தியா சிக்கி திணறுமா, இல்லை அடித்து நொறுக்குமா என்று அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பழி தீர்க்குமா?
சமீபத்தில் தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, 2-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும், போட்டிகளில் கடைசிவரை போராடித்தான் தோற்றது. இதற்கு பழி தீர்க்க இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆடுகளம் எப்படி?
இன்று போட்டி நடக்கும் விதர்பா கிரிக்கெட் மைதான ஆடுகளம் ("பிட்ச்'), ஒருநாள் போட்டிக்கு ஏற்ப சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பந்து பேட்டினை நோக்கி வரும். ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் காணப்படுவதாலும், சற்று ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வேகப்பந்து மற்றும் சுவிங் பவுலர்கள் சிறப்பாக அசத்தலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்சேர்ப்பதில் சற்று திணறலாம்.
--
மழை வாய்ப்பு
நாக்பூரில் வானம் இன்று தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்த பட்சம் 19 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை.
--
மூன்றாவது முறை
உலக கோப்பை அரங்கில், இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மூன்றாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய இரண்டு போட்டியிலும் (1992, 99) தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் அரங்கில், இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் 65 போட்டியில் மோதி உள்ளன. இதில் தென் ஆப்ரிக்கா 34, இந்தியா 24 போட்டியில் வெற்றி கண்டன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* கடந்த 1999ல், 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. இப்போட்டியில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1992ல், 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. இப்போட்டியில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முகமது அசார் (103 ரன்கள்), கங்குலி (97 ரன்கள்) உள்ளனர். தென் ஆப்ரிக்கா சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் காலிஸ் (96), கிறிஸ்டன் (84) ஆகியோர் உள்ளனர்.
* உலக கோப்பை வரலாற்றில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் ஸ்ரீநாத் (3 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்கா சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டொனால்டு (3 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts