background img

புதிய வரவு

ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சி: ஜெயலலிதா பேட்டி

சென்னை: ""தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, நேற்று கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

* நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?

தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

* ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; பல்வேறு ஊழல்களையும் பொதுமக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர்.

* தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

மே 13ம் தேதி வரை காத்திருங்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஜெ., கோரிக்கை: "அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த, உடனடியாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. இந்த தேர்தலில் பலவிதமான முறைகேடுகளில் ஆளும் தி.மு.க., கூட்டணியினர் ஈடுபட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில அசம்பாவிதங்களைத் தவிர தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்திய இந்திய தேர்தல் கமிஷனுக்கும் எனது பாராட்டு மற்றும் நன்றி. ஓட்டுப்பதிவு முடிந்து விட்டாலும், ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது இந்திய தேர்தல் கமிஷனின் கடமை. இதை நிறைவேற்றும்விதமாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி, கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், பல்வேறு இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல் ஆகியவற்றின் போது தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும், அதற்கு உறுதுணையாக தமிழக காவல் துறை செயல்பட்டதையும் கருத்தில் கொண்டு, அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் தி.மு.க.,வினர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனரா? என்பதை கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts