background img

புதிய வரவு

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் இணைய தளத்தில் வெளியானது

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டம் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் முழு மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இனிமேல் ஒரே பாடத்திட்டத்தை படிக்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மாணவ-மாணவிகள் இப்போதே சமச்சீர் பாடப்புத்தகங்கள் கேட்டு அலைகிறார்கள். மே மாதம் இறுதியில் தான் சமச்சீர் பாட புத்தகங்கள் விற் பனைக்கு வழங்க தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் இணைய தளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இன்று காலையில் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் 10-ம் வகுப்பு புத்தகங்கள் முழுவதும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் வசதிக்காக தமிழ் வழி பாடப் புத்தகங்களும், ஆங்கில வழி பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மாணவ -மாணவிகள் இண்டர்நெட் மையங்களில் ஆர்வத்துடன் புதிய சமச்சீர் பாடத்திட்டங்களை பார்த்தனர்.

பலர் பதிவிறக்கம் செய்தனர். 10-ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து பொது பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:-

4 வழி பாடத்திட்டத்தை ஒரே முறையில் உருவாக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடத் திட்டம் வரவேற்கத்தக்கது. பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு இருப்பது நகர்ப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. எனவே பாடப்புத்தகம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இணைய தளத்தில் வெளியிடப்பட்ட பாட திட்டத்தை சில தனியார் பள்ளிகள் டியூசன் சென்டர்கள் பதி விறக்கம் (டவுன் லோடு) செய்து வியாபாரம் செய்ய வழி வகுக்கும்.

எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன்:- சமச்சீர் பாடத்திட்டத்தில் எளிய மாற்றம் இல்லை. ஆனால் மாணவர்கள் சிந்திக்கக்கூடிய நிறைய பயிற்சிகள் உள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தொடர்புடைய விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. மனப் பாடம் செய்து ஒப்புவித்தல், நிலை மாறி ஏன், எதற்கு, எப்படி என்று மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. சி.பி.எஸ்.இ. பாட முறையில் வினாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வரை இருந்த மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தை விட 20 சதவீதம் எளிதாக இருக்கிறது. வண்ண படங்களு டன் தரமான காகிதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக கூட்டமைப்பு தலைவர் கிறிஸ்துதாஸ்:- இந்த பாடத்திட்டம் தரமானது இல்லை. மெட்ரிக்குலேசனில் படித்த மாணவர்களுக்கு இது போதுமான அளவிற்கு அமைய வில்லை. இந்த பாடத்திட்டத்தை மாற்றி தரமான பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts