background img

புதிய வரவு

கலைஞர் "டிவி'க்கு வந்த பணமும், கனிமொழி தொடர்பும்...

புதுடில்லி:"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், வேண்டிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதற்கு பலனாக, கலைஞர் "டிவி'க்கு லஞ்சமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்ததையடுத்து, அந்த பணம், எந்த வழியாக வந்ததோ, அதே வழியில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் தெளிவுபடுத்தியுள்ளது. இதில், கனிமொழியின் தொடர்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் தான், அவர் தற்போது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருக்கிறார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றத்தில், முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி'யின் தொடர்பு குறித்து, இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லஞ்சமாகப் பெற்ற பணம் என்றும், இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.டைனமிக்ஸ் ரியாலிட்டி மற்றும் டி.பி.ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் பல்வாவுடைது. இங்கிருந்து, குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் பி., நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து சினியுக் நிறுவனம் வழியாக கலைஞர் "டிவி'க்கு சென்றுள்ளது.மூன்றடுக்காக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த பணப் பரிமாற்றம், 2008, டிச., 23ம் தேதி துவங்கி, 2009, ஆக., 7ம் தேதி வரை நடந்துள்ளது.

டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து, 16 தவணைகளில் குசேகான் நிறுவனத்திற்கு பணம் சென்றடைந்திருக்கிறது. அதில், அதிகபட்சமாக ஒரே நாளில் (2009, ஜூலை 15ம் தேதி) குசேகான் பழ நிறுவனத்திற்கு, 100 கோடி ரூபாய் சென்றடைந்திருக்கிறது என்பதும் இதில் அடங்கும்.குசேகானிலிருந்து, சினியுக் நிறுவனத்திற்கு, 12 தவணைகளில் பணம் வந்துள்ளது. சினியுக் நிறுவனத்திடமிருந்து, ஆறு தவணைகளில் கலைஞர் "டிவி'க்கு, 200 கோடி ரூபாய் வந்துள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சி.பி.ஐ., தீவிரமாக விசாரிக்க துவங்கியதை தொடர்ந்து, கடந்தாண்டு டிச., 24ம் தேதி, கலைஞர் "டிவி' 200 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளது. அந்த தேதியில் தான் முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.கடனாக வாங்கினோம், அதை வட்டியுடன் திரும்பி செலுத்திவிட்டோம் என, சி.பி.ஐ., விசாரணையின் போது கலைஞர் "டிவி' இயக்குனர் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதன்படி, 200 கோடிக்கான வட்டி தொகையை, இந்தாண்டு, பிப்., 2ம் தேதி கலைஞர் "டிவி' திருப்பி செலுத்தியது. அன்றைய தினம் தான், ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது.இந்த விவரங்கள், கலைஞர் "டிவி'யின் ஆண்டு வரவு-செலவு கணக்கை சி.பி.ஐ., ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

சினியுக் நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு ஆறு தவணைகளில், 200 கோடியை வழங்கியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:ரூ.10 கோடி(டிச., 28, 2008), ரூ.10 கோடி( ஜன., 2, 2009), ரூ.5 கோடி(மார்ச் 20, 2009) ரூ.25 கோடி(ஏப்., 6. 2009), ரூ.100 கோடி(ஜூலை 7, 2009), ரூ.50 கோடி (ஆக., 8, 2009).மூன்றடுக்கு பணிப் பரிமாற்றத்தில், பெரும்பாலான பரிமாற்றம் ஒரே தேதியில் நடந்துள்ளது. கலைஞர் "டிவி' பணத்தை திருப்பி செலுத்தியதும், மேற்கண்ட சினியுக், குசேகான் நிறுவனங்கள் வழியாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தை அடைந்துள்ளது.இது முறையான பணம் அல்ல, சுவான் டெலிகாமுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தந்ததற்கு தவறான வழியில் கையூட்டாகக் கொடுக்கப்பட்ட பணம் என்பதும் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல் ஆகும். மேலும் இப்பணம் கலைஞர் "டிவி'க்கு குறைந்த வட்டியான, 7.5 சதவீதத்தில் தரப்பட்டிருக்கிறது. அதே சமயம், கலைஞர் "டிவி' இந்தியன் வங்கியிடம் இருந்து, 13.25 சதவீத வட்டிக்கு நிதியைப் பெற்ற தகவலையும் சி.பி.ஐ., சேகரித்தது. சுற்றுவழியில், 200 கோடி, கடனாக கலைஞர் "டிவி'க்கு வந்த பணத்தைத் தந்த இந்த கம்பெனி எதுவும் வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் அல்ல என்றும், சி.பி.ஐ., தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது. மேலும், கலைஞர் "டிவி'யை இயக்கியதில், "முக்கிய மூளையாக' கனிமொழி இருந்திருக்கிறார் என்பது சி.பி.ஐ ., குற்றப்பத்திரிகையில் உள்ள வாசகம். அதனால் தான் முறைகேடாக லஞ்சப்பணம் பெறக் காரணமாக இருந்ததாகக் கூறி லஞ்சத்தடுப்புச்சட்டம் பிரிவு 7 ன் ( இந்திய தண்டனைச் சட்டம் 120 பி) கீழ் கனிமொழி மீது குற்றம் சாட்டி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts