background img

புதிய வரவு

பெங்களூரு அணிக்கு "ஹாட்ரிக்' வெற்றி! * மீண்டும் வீழ்ந்தது யுவராஜ் அணி

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் சொதப்பிய யுவராஜ் தலைமையிலான புனே அணி, தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த 35வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கெய்ல் அதிரடி:
பெங்களூரு அணிக்கு மீண்டும் ஒரு முறை புயல் வேக துவக்கம் தந்தார் கிறிஸ் கெய்ல். இம்முறை கம்ரான் கான் பந்துவீச்சை குறி வைத்தார். இவரது முதல் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி சேர்த்து மொத்தம் 20 ரன்களை அள்ளினார். அடுத்த ஓவரில் வரிசையாக 2 சிக்சர், 1 பவுண்டரி அடிக்க, கம்ரான் கானை பார்க்கவே பாவமாக இருந்தது. ராகுல் சர்மா சுழலில் தில்ஷன்(15) சிக்கினார். தொடர்ந்து அசத்திய சர்மா பந்தில் கெய்ல்(49 ரன்) அவுட்டாக, புனே அணியினர் நிம்மதி அடைந்தனர்.
கோஹ்லி அரைசதம்:
இதற்கு பின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்து அசத்தினர். கம்ரான் கான், ராகுல் சர்மா பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரைடர் ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, டிவிலியர்ஸ் ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. தாமஸ் வேகத்தில் டிவிலியர்ஸ்(26) வீழ்ந்தார். ஜெரோம் டெய்லர் ஓவரில் வீசிய போட்டியின் 18வது ஓவரில் கோஹ்லி 2 சிக்சர் அடித்தார். சவுரப் திவாரி தன் பங்குக்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, மொத்தமாக 24 ரன்கள் எடுக்கப்பட்டன. அரைசதம் கடந்த கோஹ்லி(67) தாமஸ் பந்தில் அவுட்டானார். திவாரி 14 ரன்களுக்கு வெளியேறினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கைப்(8) அவுட்டாகாமல் இருந்தார்.
ரைடர் அரைசதம்:
கடின இலக்கை விரட்டிய புனே அணிக்கு ஜெசி ரைடர் நல்ல துவக்கம் தந்தார். ஜாகிர் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பெய்ன்(8) ஏமாற்றினார். மிதுன் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த ரைடர் 51 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் சொதப்பினர். படுமந்தமாக ஆடிய மனிஷ் பாண்டே(19), வெட்டோரி சுழலில் சிக்கினார். பின் கேப்டன் யுவராஜ் அதிரடியாக ஆடினார். சயது முகமது சுழலில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான் வேகத்தில் யுவராஜ்(41) அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மன்ஹாஸ்(3) சோபிக்கவில்லை. அரவிந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் உத்தப்பா 2 பவுண்டரி, சிக்சர் விளாசி ஆறுதல் தந்தார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. உத்தப்பா(23) அவுட்டாகாமல் இருந்தார்.
ஏற்கனவே டில்லி, மும்பை, மற்றும் சென்னை அணியிடம் வீழ்ந்த புனே அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே அணிகளை வரிசையாக வென்ற பெங்களூரு அணி "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.



முதலிடத்தில்...
நேற்று அரைசதம் கடந்த பெங்களூரு வீரர் விராத் கோஹ்லி, இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்துக்கு (7 போட்டி, 294 ரன்) முன்னேறினார். இதற்கான "ஆரஞ்சு' நிற தொப்பியை பெற்றார். இரண்டாவது இடத்தில் மும்பை அணி கேப்டன் சச்சின்(7 போட்டி, 276 ரன்) உள்ளார். தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் ஆயிரம் ரன்களை கடந்தும் அசத்தினார் கோஹ்லி.
------
சிக்சர் "300'
பெங்களூரு வீரர் சயது முகமது சுழலில் புனே அணி கேப்டன் யுவராஜ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 300வது சிக்சராக அமைந்தது.





ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல் எல்.பி.டபிள்யு.,(ப)சர்மா 49(26)
தில்ஷன்(ப)சர்மா 15(19)
கோஹ்லி(கே)ஹர்பிரீத்(ப)தாமஸ் 67(42)
டிவிலியர்ஸ்(கே)சர்மா(ப)தாமஸ் 26(20)
திவாரி(கே)ஹர்பிரீத்(ப)டெய்லர் 14(8)
கைப்-அவுட் இல்லை- 8(5)
மிதுன்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 2
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 181
விக்கெட் வீழ்ச்சி: 1-57(தில்ஷன்), 2-74(கெய்ல்), 3-140(டிவிலியர்ஸ்), 4-169(கோஹ்லி), 5-179(திவாரி).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-23-2, டெய்லர் 4-0-44-1, கம்ரான் 3-0-47-0, சர்மா 4-0-27-2, மன்ஹாஸ் 1-0-9-0, யுவராஜ் 2-0-10-0, ரைடர் 2-0-20-0.
புனே வாரியர்ஸ்
ரைடர்(கே)கைப்(ப)முகமது 51(34)
பெய்ன்(கே)வெட்டோரி(ப)அரவிந்த் 8(17)
பாண்டே(கே)திவாரி(ப)வெட்டோரி 19(23)
யுவராஜ்(கே)முகமது(ப)ஜாகிர் 41(23)
உத்தப்பா-அவுட் இல்லை- 23(17)
மன்ஹாஸ்(கே)கைப்(ப)கெய்ல் 3(5)
ஹர்பிரீத்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 9
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 155
விக்கெட் வீழ்ச்சி: 1-35(பெய்ன்), 2-79(ரைடர்), 3-101(பாண்டே), 4-131(யுவராஜ்), 5-137(மன்ஹாஸ்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-33-1, அரவிந்த் 4-0-35-1, மிதுன் 4-0-26-0, வெட்டோரி 4-0-23-1, கெய்ல் 2-0-8-1, முகமது 2-0-26-1. .

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts