background img

புதிய வரவு

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts