background img

புதிய வரவு

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக காங்கிரசில், தேர்தல் முடிவுக்குப் பின், பெரிய மாற்றம் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், கோஷ்டிப் பூசல் வலுக்கிறது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ் உட்பட, 19 பேரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்ட மூவரும், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். எனவே, தங்கபாலுவின் அதிரடி நீக்கம் நடவடிக்கை, தமிழக காங்கிரசுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தங்கபாலு செய்த குளறுபடியால், அனைத்து கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலு மீது அதிருப்தி அடைந்தனர்.தங்கபாலுவுக்கு எதிராக, தினமும் நடந்து வரும் போராட்டத்தை, டில்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தங்கபாலு, தன்னிச்சையாக கட்சியை நடத்துகிறார். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக, பலரையும் நீக்கம் செய்துள்ளார். இவரது தலைமை நீடிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 முதல், 12.05 மணி வரை, சோனியாவை, வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் குளறுபடி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து, சோனியாவிடம் விளக்கியுள்ளார்.வாசன் தெரிவித்த அனைத்து விவரங்களையும், அமைதியாக கேட்டு கொண்டிருந்த சோனியா, "நீங்கள் ஏன் தமிழக காங்., தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது?' என கேட்டதாகவும், அதற்கு வாசன், "நான் அகில இந்திய காங்கிரஸ் செயலராகவும், தமிழக காங்., தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்' என்ற பதிலை மட்டும் கூறியதாகவும், டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.சோனியாவே கேட்டுக் கொண்டதால், தட்டிக் கழிக்காமல், வாசன் தலைவர் பதவியை ஏற்க முன் வருவாரா அல்லது தன் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அவர் கேபின்ட் அமைச்சராக இருப்பதால், மாநில தலைவர் பதவியை விரும்பவில்லை.


மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளையும் கொடுத்தால், தலைவர் பதவியை ஏற்க வாசன் விருப்பம் தெரிவிப்பார். இல்லையென்றால் தன் ஆதரவாளர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் தரப்பில், கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரியை தலைவராக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்த கோஷ்டித் தலைவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், இளங்கோவனை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பின், சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி மாற்றப்படுகிறது. அந்த மாநில தலைவர்கள் மாற்றம் பட்டியலில், தமிழகமும் இடம் பெறும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts