background img

புதிய வரவு

சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி : மன்மோகன், சோனியா இன்று வருகை!

புட்டபர்த்தி : புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இன்று புட்டபர்த்தி வந்து நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். நாளை பாபாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்த சத்ய நாராயணா தனது 14வது வயதில் ஆன்மீக சக்தி பெற்றவர். தானே ஷிர்டி பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தவர். அதன்பின், புட்டபர்த்தி சத்ய சாய்பாபா என்று உலகமெங்கும் பக்தர்களால் அழைக்கப்படுபவர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பாபா நேற்றுமுன்தினம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தின் குல்வந்த் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பாபாவின் உடல் அருகில், ஆந்திர சுகாதார துறை அமைச்சர் கீதா ரெட்டி, பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர், பாபாவின் நேர்முக உதவியாளர் சத்யஜித் உட்பட பலர் சோகத்தில் அமர்ந்துள்ளனர்.

இன்று மாலை வரை மக்கள் அங்கு பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் நாளை காலை அரசு மரியாதையுடன் ஆன்மீக குருக்கள் இறுதி சடங்குகள் செய்ய பாபாவின் உடல், பிரசாந்தி நிலையத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று ராயலசீமா டி.ஐ.ஜி சாரு சின்ஹா தெரிவித்தார்.

இந்நிலையில், புட்டபர்த்தி முழுவதும் சோக வெள்ளமாக காட்சியளிக்கிறது. பாபாவின் உடலுக்கு வி.ஐ.பி.க்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் அனந்தபூர் மாவட்டமே ஸ்தம்பித்துள்ளது. பாபா மறைவால் துக்கம் அனுசரிப்பதால், ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் உணவு, குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனந்தபூர் கலெக்டர் ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‘பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவை ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரும் முடிந்த அளவுக்கு உதவி செய்து வருகின்றனர்’ என்றார்.
ரயில் நிலையங்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புட்டபர்த்தி முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், சத்ய சாய் டிரஸ்ட் பாதுகாவலர்களும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். பக்தர்கள் அஞ்சலி செலுத்த புட்டபர்த்தி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வரிசையில் காத்திருந்து பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார், முன்னாள் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, ரோசய்யா, நடிகர் சிரஞ்சீவி, மற்றும் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி பிரதிபா பாட்டில், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், பிரபுல் படேல், ராகுல் காந்தி, பா.ஜ தலைவர்கள் நிதின் கட்கரி, அத்வானி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட பலர் இன்று புட்டபர்த்தி வருகின்றனர். நாளை நடக்கும் பாபாவின் இறுதிச் சடங்கில் பா.ஜ மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கிறார். பாபா மறைவையொட்டி ஆந்திர அரசு சார்பில் நேற்று முன்தினம் முதல் நாளை வரை 4 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கர்நாடகமும் 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts