background img

புதிய வரவு

நார்வே போன 'கோடம்பாக்கம்'!!

சேரன், விஜய், ராதா மோகன் உள்பட தமிழ் திரைப்பட இயக்குநர்கள் குழு ஆஸ்லோ பயணம்!

படைப்பாளிகளுக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கும் திரைப்பட விழாக்கள் இன்றைக்கு மிக அரிதாகவே உள்ளன. வர்த்தக நோக்கில் நடிகர் நடிகைகளை வைத்து பணம் பண்ணும் இந்த திரையுலகில், உண்மையிலேயே இயக்குநர்களுக்கு கவுரவம் தரும் நோக்கில் ஒரு திரைப்பட நடத்தப்படுகிறதென்றால் அது நார்வே திரைப்பட விழாவாகத்தான் இருக்கும்.

நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் நடக்கும் இந்த பிரம்மாண்டமான தமிழ்த் திரைப்பட விழாவில் 17 தமிழ்ப் படங்களும், 10 தமிழ் குறும்படங்களும் பங்கேற்கின்றன.

சர்வதேச திரைப்பட வரலாற்றில் தமிழ் படங்களுக்கு மட்டுமே ஒரு திரைப்பட விழா நடத்தப்படுகிறதென்றால், அது நார்வே திரைப்பட விழாதான்.

ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இயக்குனர் - நடிகர் சேரன், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' புகழ் இயக்குனர் வெற்றிமாறன், ஆடுகளம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்ற ஆஸ்லோ கலைஞர் வ.ஐ.ச ஜெயபாலன், 'மதராசப்பட்டினம்' புகழ் இயக்குனர் ஏ.எல் விஜய், 'மொழி', 'அபியும் நானும்' , 'பயணம்' புகழ் இயக்குனர் ராதாமோகன், 'மைனா' புகழ் இயக்குனர் பிரபு சாலமன், 'கூடல் நகர்', 'தென்மேற்குப் பருவக்காற்று' படங்களைத் தந்த இயக்குனர் சீனு ராமசாமி, 'தா' எனும் வித்தியாசமான படம் தந்த தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் நாயகன் ஹரீஷ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இத்தனை இயக்குநர்களும் ஒரு சேர ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஆஸ்லோ புறப்பட்டனர்...

நேற்று இரவு 10 மணிக்கு திரைப்பட விழாவில் பங்கு பெறும் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஆஸ்லோ புறப்பட்டனர்.

ஆறு நாட்கள் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இக்கலைஞர்கள் பங்குபெறுவதோடு ஆரோக்கியமான விவாதங்களிலும் கலந்துகொள்கிறார்கள்.


நோர்வே தமிழ் திரைப்பட விழா நிகழ்ச்சி விவரம்:

20.04.2011 Onsdag kl 17.00(Lørenskog Kino)
கலைஞர்கள் வரவேற்பு
பாட்டோடு நாங்கள்
இயக்குனர்கள் பங்குகொள்ளும் "நேர்முக நேரம்"
குறும்படங்கள் திரையிடல் (3 குறும்படங்கள்)
நடனங்கள்

நிறைவு நாள் நிகழ்வுகள்

25.04.2011 Mandag kl 17.00 (Lørenskog Kino)
பாட்‌டோடு நாங்கள்
நடனங்கள்
இயக்குனர்களின் விவாத மேடை
”தமிழர் விருது” மற்றும் "குறும்பட விருது" வழங்கும் நிகழ்வு

திரைப்படக் கலை, புகைப்படக்கலை சம்பந்தமாக பயிற்சி வகுப்புகளும் இந்த விழாவில் நடக்கின்றன. 22-ம் திகதி வெள்ளிக் கிழமை புகைப்படக் கலை, திரைப்படக் கலை நுணுக்கங்கள், பயிற்சி பட்டறைகள், இயக்குனர் சேரன் மற்றும் ஏனைய இயக்குனர்கள் பங்களிப்போடு நடத்தப்படும்.

இதில் புகைப்படப் போட்டியும் நடைபெற இருக்கிறது. தேர்வு செய்யப்படும் மூன்று புகைப்படங்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சியின்போது சான்றிதழும், பரிசும் வழங்கப்படும். படங்கள் பின்வரும் தலைப்புகளுக்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்

நோர்வேயின் இயற்கையழகு
மனித உறவுகள்
உருவப்படம் - (குழந்தைகள், மனிதர்கள், மிருகங்கள்)

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் வசீகரன் சிவலிங்கம் செய்துள்ளார்.

4 நாட்களில் விசா கொடுத்த நார்வே தூதரகம்

இந்த விழா சிறப்பாக நடப்பதில் நார்வே நாட்டின் தூதரகத்துக்கு முக்கிய பங்குள்ளது. பொதுவாக நார்வே செல்ல ஷெங்கன் விசா தேவை. இதைப் பெற குறைந்தது 10 தினங்களாவது ஆகும். ஆனால் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டும், நார்வேயில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா என்பதாலும், 4 தினங்களுக்குள் விசா வழங்கியுள்ளது நார்வே தூதரகம். "ஈஸ்டர் விடுமுறைக் காலம் தொடங்கும் இந்த சீஸனில் இவ்வளவு குறுகிய காலத்தில் விசா கிடைத்தது மிகப் பெரிய அதிசயம். நார்வே தூதரகத்துக்கு நன்றி", என்றார் வசீகரன்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts