background img

புதிய வரவு

செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.

சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இத்தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரதநாளிலேயே எமனின் சபையில் நம்பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.
கள்ளழகர்:

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார்.

திருவண்ணாமலையில்:

சித்ரா பவுர்ணமி நாளில் தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர் என்கிறார் பிரபல ஜோதிடர் சதீஷ்குமார்.

திருமணத் தடை நீங்கும்:

ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க, மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார்.

ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக் கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடை பெறுகிறது.

விரத பலன்கள்:

சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்ம வினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது. அதனால் போலும் `புண்ணியம் (தர்மம்) செய் புனிதனாவாய்' என்பதனை உணர்த்த அம்பாள் ஆலயங்களில் சித்திரபுத்தினார் கதை படித்து சித்திரைக் கஞ்சி வார்த்து தர்மம் செய்யத் தூண்டுகிறார்கள்.

மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லனவற்றை நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.

இறைவியாகிய அம்பாள், இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்கு காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந்நன் நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூரவிலகி விடும். மங்களம் பொங்கும் நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை போலவே இந்நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெய்யிலுக்கு இதமாக தயிர் சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை ஏழைகளுக்கு தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்ரா பவுர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய் ஒரு நோட்டுப் புத்தகம் பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts