background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் விசாரணை முறையாக நடக்க கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-விஜயகாந்த்

சென்னை: சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி ஸ்பக்ட்ரம் ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீடிப்பதுதான் வரலாறு.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும்.

தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.

அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர்.

அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.

ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக தில்லி திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை.

20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா?

எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராசா நீடித்தால் இந்த இமாலய ஊழலில் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த 214 கோடி ரூபாய் தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக நீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts