background img

புதிய வரவு

தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்

அரசு மீது தவறான புகார் தரும் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையாளர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரமா மற்றும் தமிழக தேர்தல் ஆணையாளர் பிரவீண்குமார் ஆகியோருக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் எங்களுக்கு எதிராக தவறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அ.தி.மு.க. ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறது. இன்று (25.4.2011) காலை, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் ஒன்றினை அளித்திருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் எங்களுக்கு தெரியவந்துள்ளது. எங்கள் அரசைப் பற்றி பொதுமக்கள் அவதூறாக எண்ண வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது நன்றாகத் தெரிகிறது.


அதில் எங்கள் அரசு காபந்து அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிவிட்டதாக அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.


அத்துடன், அவ்வாறு தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் போது, முக்கிய கோப்புகள் பலவும் அழிக்கப்படுவதாகவும், எனவே பழைய தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய போலீஸ் படையின் துணையை நாடியிருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறான அவர்களின் புகார்கள் மிகவும் அபத்தமானது, தவறானதாகும். அத்துடன் ஒரு தீய நோக்கத்துடன் அந்தப் புகார்கள் அமைந் துள்ளன. அ.தி.மு.க.வினர் ஒரு சில முறை ஆட்சியில் இருந்துள்ள போதும், தற்போதைய அரசாங்கத்தை காபந்து சர்க்கார் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களுக்கு அரசியல் சட்டம் மற்றும் நிர்வாக சட்டங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


காபந்து சர்க்கார் என்றால், ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்சிக் காலம் முடிந்த பின்னரும் நீடிப்பது அல்லது பெருவாரியான ஆதரவை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அல்லது அதிக ஆதரவை நிருபிக்க காத்திருக்கும் நிலையில் தற்காலிகமாக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொள்ளும் நிலையில் செயல்படுவதுதான். எங்களது அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இந்த அரசின் ஆட்சிக் காலம் 2011 மே 14 ம் தேதி தான் முடிவடைகிறது.


புதிய தலைமைச் செயலக வளாகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும்.


அப்போதிருந்தே, பல்வேறு கட்டங்களாக, அரசின் பல்வேறு துறைகள் புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் மாறி வருகின்றன. அந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே கூட, பொதுத்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை, தொழிற்துறை, சட்டமன்றப் பேரவை அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் புதிய தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.


அதுமட்டுமின்றி, புதிய தலைமைச் செயலகத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், பேரவையில் கவர்னர் உரை நிகழ்த்தியதும் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டமும் ஏழு முறை நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் மீறாமல் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் தான் இவைகள்.


அத்துடன், முக்கிய கோப்புகளை இடம் மாற்றம் செய்யும் போது, அவைகள் அழிக்கப்படுவதாக தெரிவித்திருப்பது, மிகவும் அவதூறான ஒன்றாகும் என்பதோடு, அவைகள் தவறானதும், விஷமத்தனமானதுமாகும். இது ஆளும் கட்சியை மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே குற்றம்சாட்டுவதாகும்.



இதுபோன்ற ஆதாரமற்ற நிலையில் தவறான புகார் அறிக்கை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். மாநில தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் காவல்படை அல்லது மத்திய பாதுகாப்புப் படையை கோருவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, நாங்கள் இத்தகைய புகார்களை கடுமையாக கண்டிக்கின்றோம். அந்தப் புகார் கடிதத்தில் கையெழுத்திட்ட நால்வர் மீதும், அவர்கள் சார்ந்த கட்சி மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts