background img

புதிய வரவு

சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில், 5 மத்திய மந்திரிகளும், காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹசாரே கூறி இருப்பதாவது:

கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஒருவர் (திக்விஜய்சிங்), கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. அவருக்கு கட்சியின் ஆதரவு இருப்பதாக கருதுகிறேன். அவரது கருத்துகளை நீங்கள் (சோனியா) ஏற்றுக்கொள்கிறீர்களா?


மேலும், கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு மத்திய மந்திரி (கபில் சிபல்), கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்தவுடன், ஆலோசனை நன்றாக இருந்ததாக கூறினார்.


பிறகு அவர் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு சமூக பிரதிநிதிகள் பணிந்து விட்டதாகவும், லோக்பால் வரைவு மசோதாவை நீர்த்துப்போக செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அவர் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்.


இதுதவிர, கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் சாந்தி பூஷணின் நற்பெயரை கெடுக்கும் வகையில் போலியான சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் இருப்பவர்கள், தங்களை மக்களின் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவன்தான் நான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளும், போலி சி.டி.களும் வெளியாவதை பார்த்தால், இது எங்களின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியாக தோன்றுகிறது.


சத்தியத்தின் பாதையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் என்னைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர்களால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களின் அவதூறு பிரசாரம் தோற்று விட்டது. இதனால், மக்கள் மத்தியில் எங்களின் கவுரவம் அதிகரித்துள்ளது.


இதேபோல, கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிலைமை என்னாகும்?


ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், நாடு முழுவதும் அனைவரிடமும் தோன்றியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலம் காத்திருக்க நாடு தயாரில்லை.


மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த மசோதா உருவாக்கும் பணி சீர்குலைக்கப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறேன். ஆகவே, மசோதா உருவாக்கும் பணியை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று தங்களது சகாக்களை தாங்கள் (சோனியா) அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


லோக்பால் மசோதா உருவாக்குவதை சீர்குலைக்க நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒன்ற சேர்வோம். இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts