background img

புதிய வரவு

கோவைக்கு ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் : ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் "அட்வைஸ்'

ஈரோடு : ""கோவை பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது,'' என, ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு நகரில் மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம் ஆகிய இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலுக்காக மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் உங்களுக்காக பாடுபடக்கூடியவர் முத்துசாமி. சில தலைவர்கள் தேர்தல் நேரம் வந்தால் மட்டுமே, "அதை செய்வோம், இதை செய்வோம்' என்பர். "வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம்' என்பர். தேர்தல் வந்தால் தமிழ்நாடு, இல்லையென்றால் கோடநாடு சென்று விடுவர்.அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு தலைவர் சேர்ந்துள்ளார். சினிமாவில் வலம் வந்து தற்போது வாய்ப்பு இல்லாமல் உள்ளார். அவர் சினிமாவில் கதாநாயகன்; அரசியலில் வில்லன். ஐந்து நாட்களாக காமெடி நடிகனாக மாறி, நாடே சிரிக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம். வேட்பாளரை என்ன அடி அடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாளை கோவை பொதுக்கூட்டத்தில் அந்த நடிகரும் பேசப்போகிறாராம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அக்கறை உள்ளவன் என்பதால் சொல்கிறேன்; நீங்கள் தலையில் ஹெல்மெட் போட்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் தலையும் தப்பாது.தி.மு.க., தலைவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக ஜெயலலிதா பேசி வருகிறார். குடும்ப ஆட்சி நடக்கிறது என்கிறார். உனக்கு குடும்பம் இல்லை; வாரிசு இல்லை. லட்சக்கணக்கான குடும்பத்தை காப்பாற்றும் ஆட்சிதான் குடும்ப ஆட்சி. நாட்டையே குடும்பமாக கருதி முதல்வர் கருணாநிதி ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, மக்கள், தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கூட்டமில்லை!துணை முதல்வர் நேற்று மதியம் 3 மணிக்கு ஈரோடு மணிக்கூண்டில் பிரசாரத்தை துவக்கிய போது, வெயில் கொளுத்தியது. ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு பகுதிகளில் அவரது பேச்சை கேட்க கூட்டம் குறைவாகவே இருந்தது. ஸ்டாலின் வேனைச் சுற்றி திரண்டிருந்த கட்சியினர், போலீசாரைத் தவிர பெரியளவில் கூட்டமில்லை.மாவட்ட செயலர் ராஜா, அந்தியூரில் துணை முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்று விட்ட நிலையில், தி.மு.க., மாநகரச் செயலரான மேயர் குமார் முருகேசாவது, கட்சியினரை திரட்டியிருக்கலாம். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஈரோட்டில் துணை முதல்வர் பேசிய மூன்று இடங்களிலும் கூட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts