background img

புதிய வரவு

கால் இழந்த வீராங்கனை விவகாரம் விஸ்வரூபம்:ரயில்வேயில் வேலை, ரூ. 2 லட்சம் உதவி

பெரெய்லி: ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையர்கள் கீழே தள்ளி விட்டதால், கால்பந்து வீராங்கனை காலை இழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி ரயில்வே துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதே போல தேசிய பெண்கள் கமிஷனும் உ.பி., அரசிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது.
உ.பி.,யை சேர்ந்த முன்னணி கால்பந்து வீராங்கனை சோனு என்ற அருணிமா சின்கா(23). இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்கலை., அளவில் வாலிபால் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வேலை தேடிய இவர், மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்.,) நடத்திய தேர்வில் கலந்து கொள்ள, லக்னோவில் இருந்து "பத்மாவதி எக்ஸ்பிரஸ் மூலம் டில்லி சென்றார். பெரெய்லி மற்றும் செனாடி இடையே ரயில் சென்ற போது, சில கொள்ளையர்கள் சோனுவை சூழ்ந்து கொண்டனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர். அப்போது சோனு தடுக்க, ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.
கால் துண்டிப்பு:
தண்டவாளத்தில் விழுந்த அவருக்கு இன்னொரு அதிர்ச்சி. எதிர் திசையில் வந்த மற்றொரு ரயில் சோனுவின் கால்கள் மீது ஏறிச் சென்றது. இதில், இடது முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இடது காலை அகற்ற வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
குறைந்த உதவி:
இதையடுத்து இவருக்கு ரூ. 25 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அறிவித்தார். கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் குறைந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது.
பணிந்தது அரசு:
பல்வேறு தரப்பிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்ப அரசு பணிந்தது. உதவி தொகையை அதிகரிக்க முன் வந்தது. தவிர, அரசு வேலையும் வழங்கப்பட உள்ளது. இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,""முதலில் 25 ஆயிரம் வழங்கினோம். விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் விளையாட்டு ஆணையத்தின் மூன்று அதிகாரிகளை ஆஸ்பத்திரிக்கு சென்று சோனுவை பார்த்து, அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இந்த அறிக்கை கிடைத்த நிலையில் ரூ. 2 லட்சம் நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி உதவி அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.
சோனுவின் விபத்து பற்றிய விசாரணையை உ.பி., அரசு தீவிரப்படுத்த வேண்டும். அவருக்கு தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும். உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையிடம் வேலை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்,என்றார்.
வேலை உறுதி:
இதற்கிடையே சோனுவுக்கு வேலை வழங்க ரயில்வே துறை முன் வந்துள்ளது. இது குறித்து ரயில்வே போர்டு தலைவர் விவேக் சகாய் கூறுகையில்,""சோனுவுக்கு செயற்கை கால் பொருத்துவது உள்ளிட்ட அனைத்து சிகிச்சைக்கும் தேவைப்படும் செலவை ரயில்வே ஏற்கும். அவருக்கு ரயில்வே துறையில் வேலையும் வழங்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ரயில்வே தரப்பில் நான்கு நபர் உயர்மட்ட குழு விசாரித்து வருகிறது,என்றார்.
பிரதமர் உத்தரவு:
சோனுவுக்கு ஏற்பட்ட சோகம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பிரதமர் அலுவலகம் சார்பில் ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் அமைப்புகளும் ஆதரவாக களமிறங்கியுள்ளன. இது குறித்து தேசிய பெண்கள் கமிஷனின் தலைவர் யாஸ்மின் அப்ரார் கூறுகையில்,""ரயில் பயணத்தின் போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளம் வீராங்கனையான சோனுவுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக உ.பி., அரசிடம் இருந்து விரிவாக அறிக்கை கேட்டுள்ளோம்,என்றார்.
கராத் காட்டம்
மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கூறுகையில்,""பாதுகாப்பு பணிக்கு போதிய போலீசார் இல்லாததால் தான் இத்தகைய சோக சம்பவங்கள் ஏற்படுகின்றன. ரயில்வே போலீசில் சுமார் 11 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. பயணிகளின் நலனில் ரயில்வேக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது,என்றார்.
பா.ஜ., புகார்
பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,""தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைக்கு ஏற்பட்ட கதி அதிர்ச்சி அளிக்கிறது. ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்று 6 மணி நேரம் தவித்துள்ளார். இது மம்தா பானர்ஜியின் ரயில்வே துறையின் இயலாமையை காட்டுகிறது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அடங்கி இருப்பதால், உ.பி., முதல்வர் மாயாவதியும் பொறுப்பேற்க வேண்டும். உ.பி.,யில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,என்றார்.
உச்சக்கட்ட சோகம்
கால்பந்து வீராங்கனைக்கு கால்கள் தான் முக்கியம். அந்த கால்களை இழந்த விட்ட நிலையில், மிகுந்த சோகத்துடன் இருக்கிறார் சோனு சின்கா. இது குறித்து ஆஸ்பத்திரியின் படுக்கையில் இருந்தவாறு கூறுகையில்,""இன்னும் அதிக காலம் வாழ்க்கை நடத்த வேண்டிய எனக்கு சிறிய உதவி தொகை எல்லாம் தேவையில்லை. நிரந்தரமாக அரசு வேலை தான் வேண்டும். இனி தலைசிறந்த கால்பந்து வீராங்கனையாக வர முடியாதே என்ற ஏக்கம் என்னை வாட்டுகிறது,என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts