background img

புதிய வரவு

சென்னை கிங்ஸ் சொதப்பல் பந்துவீச்சு! * வல்தாட்டி சதத்தில் பஞ்சாப் அணி வெற்றி

மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வல்தாட்டி அதிரடி சதம் அடித்து கைகொடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை கிங்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹாரிஸ் வாய்ப்பு:
பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. நாதன் ரிமிங்டனுக்கு பதிலாக ரேயான் ஹாரிஸ் வாய்ப்பு பெற்றார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதிர்ச்சி துவக்கம்:
சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில், அனிருதா ஸ்ரீகாந்த் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா (0), வல்தாட்டியிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
விஜய் அபாரம்:
பின் இணைந்த முரளி விஜய், பத்ரிநாத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த முரளி விஜய், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, தனது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது, 43 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி <உட்பட 74 ரன்கள் எடுத்த முரளி விஜய், பியுஸ் சாவ்லா சுழலில் "ஸ்டெம்பிங்' ஆனார்.
பத்ரிநாத் அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில், ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
ரேயான் ஹாரிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் "கிளீன் போல்டான' தோனி, 20 பந்தில் 43 ரன்கள் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (66) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் பிரவீண் குமார் 2, ரேயான் ஹாரிஸ், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
சற்று கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், வல்தாட்டி ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த போது, கில்கிறிஸ்ட் (19) அவுட்டானார். மறுமுனையில் பவுண்டரி மழை பொழிந்த வல்தாட்டி, அரைசதம் கடந்தார்.
வல்தாட்டி சதம்:
அடுத்து வந்த மார்ஷ் (12) சோபிக்கவில்லை. அதிரடியாக ஆடிய சன்னி சிங் (20) நிலைக்கவில்லை. பின் களமிறங்கிய அபிஷேக் நாயரும் "டக்-அவுட்' ஆக, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த வல்தாட்டி, சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆல்பி மார்கல் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த வல்தாட்டி, 52 பந்தில் "சூப்பர்' சதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜகாதி பந்தில் "சூப்பர் சிக்சர்' அடித்த தினேஷ் கார்த்திக் வெற்றியை உறுதி செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வல்தாட்டி (120 ரன்கள், 63 பந்து), தினேஷ் கார்த்திக் (21) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் சவுத்தி, மார்கல், ரந்திவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வல்தாட்டி தேர்வு செய்யப்பட்டார்.
முதல் சதம்
சென்னை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் நான்காவது ஐ.பி.எல்., தொடரில், முதல் சதத்தை பதிவு செய்தார். இது, ஐ.பி.எல்., அரங்கில் 13வது சதம்.
---
முதல் வெற்றி
கடின இலக்கை "சேஸ்' செய்த பஞ்சாப் அணி, ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில், சென்னை கிங்ஸ் 6ல் வெற்றி கண்டது. ஒரு போட்டி "டை' ஆனது.
---
மூன்றாவது அதிகபட்சம்
நேற்று, 120 ரன்கள் எடுத்த பஞ்சாப் வீரர் வல்தாட்டி, ஐ.பி.எல்., அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் பிரண்டன் மெக்கலம் (158), முரளி விஜய் (127) ஆகியோர் உள்ளனர்.
---
பஞ்சாப் பதிலடி
கடந்த ஆண்டு தர்மசாலாவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை பஞ்சாப் அணி பதிலடி கொடுத்தது.
* இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், ஐந்தாவது சிறந்த "சேஸிங்கை' பஞ்சாப் அணி பதிவு செய்தது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (217/7, எதிர்-டெக்கான், 2008), பஞ்சாப் (204/2, எதிர்-கோல்கட்டா, 2010), பெங்களூரு (204/2, எதிர்-பஞ்சாப், 2010), சென்னை (195/4, எதிர்-பஞ்சாப், 2010) உள்ளிட்ட அணிகள் அதிக ரன்னை "சேஸ்' செய்தன.
---
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 0(1)
முரளிவிஜய் (ஸ்டெம்)கில்கிறிஸ்ட் (ப)சாவ்லா 74(43)
ரெய்னா (கே)வல்தாட்டி (ப)பிரவீண் 0(1)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 66(56)
தோனி (ப)ஹாரிஸ் 43(20)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 188
விக்கெட் வீழ்ச்சி: 1-0(அனிருதா), 2-0(ரெய்னா), 3-124(முரளிவிஜய்), 4-188(தோனி).
பந்துவீச்சு: பிரவீண் 4-1-37-2, ஹாரிஸ் 4-0-25-1, மெக்லாரன் 4-0-31-0, சாவ்லா 3-0-33-1, அபிஷேக் 2-0-24-0, பார்கவ் 3-0-35-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி -அவுட் இல்லை- 120(63)
கில்கிறிஸ்ட் (கே)ரந்திவ் (ப)மார்கல் 19(15)
மார்ஷ் -ரன் அவுட்-(அனிருதா/ரந்திவ்) 12(14)
சன்னி (கே)ஜகாதி (ப)ரந்திவ் 20(11)
அபிஷேக் எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 0(1)
கார்த்திக் -அவுட் இல்லை- 21(11)
உதிரிகள் 1
மொத்தம் (19.1 ஓவரில், 4 விக்.,) 193
விக்கெட் வீழ்ச்சி: 1-61(கில்கிறிஸ்ட்), 2-100(மார்ஷ்), 3-136(சன்னி), 4-136(அபிஷேக்).
பந்துவீச்சு: அஷ்வின் 4-0-37-0, சவுத்தி 4-0-33-1, மார்கல் 3-0-38-1, ரந்திவ் 4-0-32-1, ஸ்டைரிஸ் 1-0-13-0, ஜகாதி 2.1-0-28-0, ரெய்னா 1-0-12-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts