background img

புதிய வரவு

சென்னை கிங்ஸ் "சூப்பர்' வெற்றி! *பெங்களூரு மீண்டும் ஏமாற்றம்


சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பவுண்டரி மழை பொழிந்த மைக்கேல் ஹசி, சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பீல்டிங், பவுலிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி, "ஹாட்ரிக்' தோல்வி அடைந்து ஏமாற்றியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ஸ்டைரிஸ் நீக்கப்பட்டு, மைக்கேல் ஹசி இடம் பெற்றார். பெங்களூரு அணியில் அரவிந்த் நீக்கப்பட்டு, ஆசாத் பதான் சேர்க்கப்பட்டார்."டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, மூன்றாவது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறியது. வான்டர் வாத்தின் ஓவரில் முரளி விஜய், அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் (31) அவுட்டானார்.
ரெய்னா அதிரடி:
கடந்த முறை ஏமாற்றிய ரெய்னா, நேற்று அதிரடியில் மிரட்டினார். நினன் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட பந்தில் 16 ரன்கள் எடுத்த ரெய்னா, அவரிடமே சிக்கினார். பின் வந்த கேப்டன் தோனி (22), ஜாகிர் கான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து திரும்பினார்.
ஹசி அபாரம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த மைக்கேல் ஹசி, வெட்டோரி, விராத் கோஹ்லியின் பந்துகளில் சிக்சர், பவுண்டரிகள் அடித்தார். பின் வான்டர் வாத் ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் மார்கல் (9), பத்ரிநாத் (5) ஏமாற்றினர். 20 ஓவரில் சென்னை கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஹசி 83 ரன்களுடன் (11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
தில்ஷன் "டக்':
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, தில்ஷன் "டக்' அவுட்டாகி, அதிர்ச்சி தந்தார். அதிரடி காட்டிய ஆசாத் பதான்(14) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வில் சுழலில் அகர்வால் (7)சிக்கினார்.
கோஹ்லி ஏமாற்றம்:
பின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்தனர். முதலில் சற்று நிதானம் காட்டிய இவர்கள், ஜகாதியின் ஓவரில் 14 ரன்கள் எடுத்து, போகப்போக அதிரடிக்கு மாறினர். அஷ்வின், ரந்திவ் பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி 35 ரன்களுடன் திரும்பினார்.
டிவிலியர்ஸ் அரைசதம்:
அடுத்து வந்த சவுரப் திவாரி (14), புஜாரா (2) ஏமாற்ற, அணி தோல்வியை நோக்கி சென்றது. ஒருபக்கம் விக்கெட் சரிந்த போதும், மனம் தளராமல் போராடிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார். இவர் ஜகாதி, சவுத்தியின் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த போது டிவிலியர்ஸ், அனிருதாவிடம் "பிடி' கொடுத்து வெளியேற, பெங்களூரு அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது.
சென்னை வெற்றி:
கடைசி நேரத்தில் வான் டர் வாத் (14*), வெட்டோரி (2*) போராடிய போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக மைக்கேல் ஹசி தேர்வு செய்யப்பட்டார்.

பீல்டிங் சொதப்பல்
பெங்களூரு அணியின் பீல்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. இந்திய அணியின் சிறந்த "பீல்டர்' எனப் பெயர் பெற்ற முகமது கைப், ஆசாத் பதான், அகர்வால் என வரிசையாக, எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தனர். இதில் ஹசி 8, 69, 71 ரன்கள் எடுத்த போது கொடுத்த "கேட்ச்களை' வீணாக்கியதால், கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி-அவுட் இல்லை- 83(56)
விஜய்(கே)ஜாகிர்(ப)நினன் 31(21)
ரெய்னா(கே)அகர்வால்(ப)நினன் 29(16)
தோனி(கே)டிவிலியர்ஸ்(ப)ஜாகிர் 22(16)
மார்கல்(கே)அகர்வால்(ப)வான் டர் 9(8)
பத்ரிநாத்(கே)நினன்(ப)வான் டர் 5(3)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-51(முரளி விஜய்), 2-96(ரெய்னா), 3-147(தோனி), 4-176(மார்கல்), 5-183(பத்ரிநாத்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-33-1, வெட்டோரி 4-0-23-0, வான் டர் வாத் 4-0-49-2, தில்ஷன் 2-0-21-0, நினன் 3-0-31-2, விராத் கோஹ்லி 3-0-23-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)மார்கல்(ப)அஷ்வின் 7(13)
தில்ஷன்(கே)அனிருதா(ப)மார்கல் 0(1)
ஆசாத்(ப)சவுத்தி 14(5)
கோஹ்லி(கே)அனிருதா(ப)ஜகாதி 35(28)
டிவிலியர்ஸ்(கே)அனிருதா(ப)மார்கல் 64(44)
சவுரப்(கே)தோனி(ப)ரந்திவ் 14(13)
புஜாரா(கே)விஜய்(ப)ரந்திவ் 2(4)
வான் டர்-அவுட் இல்லை- 14(10)
வெட்டோரி-அவுட் இல்லை- 2(2)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 162
விக்கெட் வீழ்ச்சி: 1-1(தில்ஷன்), 2-17(ஆசாத் பதான்), 3-31(ஆசாத் பதான்), 4-73(விராத் கோஹ்லி), 5-112(சவுரப் திவாரி), 6-127(புஜாரா), 7-145(டிவிலியர்ஸ்).
பந்து வீச்சு: மார்கல் 4-0-34-2, சவுத்தி 4-0-32-1, அஷ்வின் 4-0-22-1, ரந்திவ் 4-0-24-2, ஜகாதி 3-0-36-1, ரெய்னா 1-0-10-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts