background img

புதிய வரவு

தேர்தல் ஆணைய உத்தரவின்றி 'டாஸ்மாக்' கடைகளில் புது சரக்கு போடக்கூடாதாம்!!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதியின்றி 'டாஸ்மாக்' கடைகளில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்யக்கூடாது என்பதால் மதுபான தயாரிப்பாளர்களும் குடிமகன்களும் கடுப்படைந்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோல்டன் வார்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், புதிய ரக மதுபானத்தை வாங்குவதை நிறுத்தி வைக்கும் வகையில் 'டாஸ்மாக்' நிறுவனம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய ரக மதுவை வாங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது 'டாஸ்மாக்' தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது புதிய ரக மதுக்களை வாங்குவதற்கு அனுமதி கேட்டு அரசுக்கு 'டாஸ்மாக்' அதிகாரி எழுதிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில், 'மாதந்தோறும் புதிய ரக மதுக்களை அறிமுகம் செய்யும் நடவடிக்கையை தொடரலாமா? தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான 'டாஸ்மாக்' கடைகளில் 'பீர்' தட்டுப்பாடு நிலவுகிறது. தினமும் கடைகளில் அவை காலியாகிவிடுவதால் அதிக தேவை ஏற்படுகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணைய அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி கேட்டபோது, தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை புதிய ரக மது அறிமுகம் செய்வதை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியதாகவும், எனவே தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை புதிய ரக மது வாங்குவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் 'டாஸ்மாக்' தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts