background img

புதிய வரவு

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, இவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு 365 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிக அதிக சொத்து மதிப்பு உள்ள கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமை, அவருக்கு கிடைக்கும். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக விரும்பினார்.

இதற்கு காங்., மேலிடம் மறுப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகனும், அவரது தாயார் விஜயலட்சுமியும் வெளியேறினர். ஜெகன் மோகன், தனது கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும், விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தனர். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். கடப்பா மற்றும் புலிவெந்துலா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 8ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கள் கட்சி சார்பில் ஜெகன்மோகனும், விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக, ஜெகன்மோகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது, தனது சொத்து பட்டியலையும் அவர் தாக்கல் செய்தார். அந்த பட்டியலில், தனக்கு சொந்தமாக 365 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பாரதிக்கு சொந்தமாக, 41 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய லோக்சபா எம்.பி.,க்களில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கம்மம் தொகுதி எம்.பி., நம நாகேஸ்வர ராவுக்கு தான், அதிக சொத்துகள் உள்ளன. இவருக்கு சொந்தமாக, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிகப் பெரிய கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமையை, நாகேஸ்வர ராவிடம் இருந்து தட்டிப் பறித்து விடுவார். கடந்த 2004ல் நடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டி தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனது மகன் ஜெகனுக்கு சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது, ஜெகன் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த அடுத்த சில ஆண்டுகளில், தற்போது அவரது சொத்து மதிப்பு, 365 கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts