background img

புதிய வரவு

அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளரை கொலை செய்ய திட்டம்: ஜெ., புகார்

சென்னை: ""அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளரை கொலை செய்ய முயற்சி நடப்பதால், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க, காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்,'' என, ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலின்போது, தி.மு.க.,வினரின் தில்லு முல்லுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக் காட்டியதற்காக, அ.தி.மு.க.,வினர் மீதும், கூட்டணி கட்சியினர் மீதும், தினமும் கொடூர தாக்குல்கள் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் ஓட்டு போடுகின்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க.,வினர் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தினர். இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சேதுபதி, தியாகராஜன் படுகாயம் அடைந்தனர். திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட, பொன்மார் பகுதி கிளை செயலர் பிரேம்நாத் வீட்டை, தி.மு.க.,வினர் அடித்து நொறுக்கியதுடன், பிரேம்நாத்தையும் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை கொலை செய்ய, தி.மு.க., வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென நியமிக்கப்பட்ட கூலிப்படை, தொகுதிக்குள் நடமாடி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

பழனிச்சாமி, பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்டவர் என்பதால், அ.தி.மு.க., வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் தி.மு.க.,வினரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவும், காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெ., தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts