background img

புதிய வரவு

10வது முறையாக போட்டி:உம்மன்சாண்டி வெல்வாரா?

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுபள்ளி தொகுதியில், 10வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன்சாண்டி அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, வயலார் ரவியை தொடர்ந்து மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் உம்மன்சாண்டி. தேசிய அரசியலில் அவ்வளவாக நாட்டம் இல்லாத உம்மன்சாண்டி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கோட்டயம் மாவட்டத்தின் புதுபள்ளி தொகுதியில், கடந்த 1970ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். ஏற்கனவே, இவர் கேரள முதல்வராகவும் இருந்துள்ளார். அந்தோணியும், வயலார் ரவியும் மத்திய அமைச்சர்களாக உள்ளதால், இந்த முறை உம்மன்சாண்டி வெற்றி பெற்றால் முதல்வராவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.புதுபள்ளி தொகுதியில் இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுஜாசூசன் போட்டியிடுகிறார். "புதுபள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி தோற்றால் அது அதிசயமாக தான் கருதப்படும்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், கல்லூரி விரிவுரையாளரான சூசன் குறிப்பிடுகையில், "அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நபரை தொடர்ந்து சட்டசபைக்கு அனுப்புவது பண்ணையாளர் நடைமுறைக்கு சமமானதாகும். ஜனநாயக நடைமுறைப்படி இது தவறு.
இத்தொகுதி மக்கள் புதிய வேட்பாளரை விரும்பு கின்றனர். எனக்கு பெண்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் உம்மன்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிந்து ஜாய், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். கடந்த முறை சாண்டியை எதிர்த்து பிரசாரம் செய்த சிந்து ஜாய், தற்போது, சாண்டியை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts