background img

புதிய வரவு

ஓட்டு போட வழங்கிய ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்த மக்கள்

ப.வேலூர்:பா.ம.க.,வுக்கு ஓட்டு அளிக்க வலியுறுத்தி, தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, நடந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பி வழங்கினர். இச்சம்பவம், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு மாதமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. தேர்தலில், வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பரிசு பொருளோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்குபவர் மற்றும் பெறுபவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்தது.அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில், தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கெடுபிடி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின் உத்தரவை சட்டை செய்யாத அரசியல் கட்சியினர், எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக, பலர் கைது செய்யப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, பரமத்தி யூனியன் வசந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடந்தையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அன்பு, பா.ம.க., சின்னத்தில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி, ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். விடிந்ததும் இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களது ஒற்றுமையை சீர்குலைக்க பார்ப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர். அதன்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகரான அன்புவை, அப்பகுதி மக்கள் வரவழைத்தனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன், தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை மக்கள் முன்னிலையில் அவரிடமே திருப்பி அளித்தனர். ஓட்டுக்கு பணம் வழங்குவதும் குற்றம், அதை பெறுவதும் குற்றம் என்ற நிலையில், பெற்ற பணத்தை திருப்பி வழங்கிய சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts