background img

புதிய வரவு

அதிக ஓட்டுப்பதிவுக்கு மக்களின் விழிப்புணர்வே காரணம் : பிரவீன்குமார் பேட்டி

சென்னை : ""தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது. 81 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்,'' என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். மூன்று ஓட்டுச்சாவடிகளில் மட்டும், 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அவர் தெரிவித்தார்.

இரவு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுப்பதிவு குறித்த சதவீதம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, முழுமையான விவரம் நள்ளிரவுக்குள் அல்லது நாளை (இன்று) காலை தான் முழுமையான விவரம் தெரியவரும். எனினும், ஓட்டுப்பதிவு சதவீதம் 75 முதல் 81க்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநில அளவில் 65 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாக, புகார்கள் வந்தன. அதில், 11 இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 54 இயந்திரங்களுக்கு பதில், புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.திருவிடைமருதூரில் இரண்டு ஓட்டுச்சாவடிகளில் அடங்கிய வாக்காளர்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டுச்சாவடி இடம் மாற்றம் தொடர்பான பிரச்னையில், இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் தலா 1,300 ஓட்டுகள் இருந்தன. மாநில அளவில், பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

நெய்வேலியில், 7.10க்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த ஓட்டுச்சாவடியில் மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும் அமைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுகள் பதிவாகவில்லை. எனவே, இந்த இரு ஓட்டுச் சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும்.இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். உத்தரவு வந்ததும், மறு ஓட்டுப்பதிவு 15ம் தேதி நடைபெறும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தூத்துக்குடியில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலை விட (70%), இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்ததற்கு, மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்.

சென்னையில், நடுத்தர மக்களும், உயர்தட்டு மக்களும் அதிகளவில் குடும்பம், குடும்பமாக வந்து ஓட்டளித்தனர். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்படுத்திய விழிப்புணர்வும், ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, படியை குறைத்துவிட்டதாக கூறப்பட்டது தவறு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான படி, முந்தைய தேர்தலை விட 60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த தொகையை தருவதாக தெரிவித்துள்ளோம்.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 11ம் தேதி இரவு 53 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்று, 1,565 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். மாநிலத்தில், எந்த ஓட்டுச்சாவடிகளிலும் கள்ள ஓட்டு சம்பவம் நடைபெறவில்லை.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

ஓட்டு எண்ணிக்கை எங்கு நடக்கும்? சென்னை மாவட்டத்திற்கான ஓட்டு எண்ணிக்கை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என, பிரவீன்குமார் தெரிவித்தார். தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மூன்று இடங்களிலும் பிரித்து பாதுகாப்புடன் வைக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts