background img

புதிய வரவு

பெங்களூருவை சமாளிக்குமா மும்பை! * 2வது வெற்றியை நோக்கி மோதல்

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணியினரும் காத்திருக்கின்றனர்.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் வெட்டோரி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது வெற்றி:
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கொச்சி அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கொடுத்த மயான்க் அகர்வால், இன்றும் சாதிக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்கத்தவறிய தில்ஷன், இன்று எழுச்சி பெற வேண்டும். விராத் கோஹ்லி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் நல்லது. கொச்சி அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் கடந்த டிவிலியர்ஸ், இன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில்-ஆர்டரில்' சவுரவ் திவாரி, புஜாரா, முகமது கைப் உள்ளிட்டோர் ரன் மழை பொழியும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் நம்பிக்கை:
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க இந்திய வீரர் ஜாகிர் கான் உள்ளார். கொச்சி அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கத் தவறிய இவர், இன்று விக்கெட் மழை பொழிய வேண்டும். இவருக்கு டிர்க் நான்ஸ், சார்லஸ் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுன், விராத் கோஹ்லி, ஆசாத் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் தில்ஷன் இணைவது சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சச்சின், இன்றும் ரன் மழை பொழியலாம். டேவி ஜேக்கப்ஸ், நல்ல துவக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "மிடில்-ஆர்டரில்' அம்பாதி ராயுடு, ரோகித் சர்மா, போலார்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், ராஜகோபால் சதீஷ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கடந்த போட்டியில் வாய்ப்பு பெறாத சைமண்ட்ஸ், இன்று களமிறங்கலாம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய லசித் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு முனாப் படேல், ஜேம்ஸ் பிராங்க்ளின், ஹென்றிகுயஸ், பெர்ணான்டோ, தவால் குல்கர்ணி, போலார்டு, சதீஷ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் இருப்பது பலம்.
---
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 3 வெற்றி கண்டன.
---

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts