background img

புதிய வரவு

சித்ரகுப்தர் கோவில்

ஸ்தல வரலாறு::

புனித நகரமான காஞ்சீபுரத்தில் ஸ்ரீகர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீசித்ரகுப்தசுவாமி கோயில் உள்ளது.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலை::

1907-ல் கோயில் திருப்பணி மேற்கொண்ட போது பூமிக்கடியில் தோண்டும் போது மதில்கள் மற்றும் கட்டிடங்கள் தெரிந்தது. அந்த கட்டிடத்தினுள்ளே ஒரே பீடத்தில் அமைந்த அம்பாள் சதேமராக சித்ரகுப்தா சிலை ஒன்று கிடைத்தது. இதனுடைய காலம் சரியாக தெரியவில்லை.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலையினை கருவறையில் வைத்துள்ளனர். ஆனால், சென்னி வளவன் என்ற பிற்கால சோழ மன்னனின் காலத்தில் அமைச்சராக இருந்த துலாபார மண்டபம் கனகராயரால் செய்யப்பட்ட உற்சவரும், அம்பாளும் தனித்தனியாக உள்ளது. இதுவே, பூஜையில் இருந்து வீதியுலா வருகின்றது.

சிறப்பு பூஜைகள்::

சித்ரா பௌர்ணமியன்று நவகலச பூஜை, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் நடைபெற்று வருகின்றது. நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் 1962-ஆம் ஆண்டு தை மாதம் இரண்டரை நாட்கள் 8 கிரகங்களும் ஒரே வீட்டில், அதாவது மகர ராசியில் இருந்தபோது, உலக நன்மைக்காக வெகுசிறப்பாக சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு::

ஸ்ரீசித்ரகுப்த சுவாமியின் வரலாறு மூன்று விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாம் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா எனப் பெயர் பெற்றார்.

காமதேனுள்ள வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம் நைவேத்யம் செய்யக் கூடாது, எருமைப் பால், எருமை தயிர் தான் அபிஷேகம் நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித் என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு, மனிதனுடைய மனதில் மறைவாக இருக்கக் கூடிய எண்ணங்களை எழுதி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறைகளை அமைத்து தருகின்றார்.

அதனால் சித்ரகுப்தா என்று பெயர். தனியொரு நபராக கோடிக் கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே, ஈசனிடம் எமதர்மன் வேண்டிக் கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளரை தர வேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரிய பகவானுக்குத் தான் அச்செயலை ஈடேற்றும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள்ளே ஓர் அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது.

அதன் பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும் போது எதிர்ப்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்றும் பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.

அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திரபுத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுத் தான் சித்ரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுவார்கள்.

சித்ர குப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றாலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே, தனது சக்தியினை சோதிக்க விரும்பியதால், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் போது, பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினை கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல நீயும் மக்களின் கணக்கினை, அதிலும் பாவ புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக படைப்புத்தொழில் உனக்கன்று,அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்ரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் இயற்றிய கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் பெண் பிரபாவதி,மனுப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வப் பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகிய மூவருமே தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார்.

(இந்த ஆலயத்தில் கர்ணகி அம்பாள் மட்டும் தான் உள்ளார்). சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார்.

சித்ர குப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல பலன்கள் தருபவர்::

ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சித்ரகுப்தர் அதிபதி நவக்கிரகத்தில் கேது கிரகம் ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகத்தின் அதிதேவதை சித்ரகுப்தர் ஆகிறார். கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள், பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், மக்கட்செல்வம் கிடைக்க, மனக்குழப்பம் அகல இவர் துணை புரிகிறார்.

ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக்கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது.

இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிர்வாகத் திட்டப்படி அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாட்டு முறை::

சித்திரை பவுர்ணமியில் சித்ர குப்தருக்கு விரதமிருந்தால் விசேஷம், அன்று சித்ரகுப்தரை தரிசத்து அருள் பெறுவது வெகு சிறப்பாகும். 7 தீபம் ஏற்றி, 7 பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.

மேலும் 200 கிராம் கொள்ளு, 200 கிராம் உளுந்து, 1 மீட்டர் பூ போட்ட பல வர்ண துணி சித்ரகுப்தருக்கு சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளு, உளுந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பால் கறக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க அனைத்து தோஷங்களும் நீங்கும்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்ல ரெயில் வசதியும் உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts