background img

புதிய வரவு

12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

திருவாரூர் : ""சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.

திருவாரூரில் இறுதிக் கட்ட பிரசாரமாக கீழ வீதியில் கருணாநிதி பேசியதாவது:நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று, மணவறையில் உள்ள புதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன்.அண்ணாதுரை தேர்தலில் போட்டியிடுமாறு ஆணையிட்டார். அதன்படி, எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வு செய்து, நாகையில் போட்டியிடலாம் என்று அண்ணாதுரையிடம் தெரிவித்தேன். அதற்கு அண்ணாதுரை, நாகையில் போட்டியிடுவதாக இருந்தால் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட வேண்டும். தனித்தொகுதியாக இருந்ததால் குளித்தலையில் போட்டியிடு என கூறினார். அதன்படி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

பின் தஞ்சை, சென்னை உட்பட 11 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 12வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த 12 என்பதற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் தொடர்புண்டு. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் வரும்.திருவாரூரில் நண்பர் தென்னனுடன் சேர்ந்து விளையாடியது தான் இந்த கீழ வீதி. அவர் மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுடனும் விளையாடியுள்ளேன். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நானும், நண்பர்களும் படித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை, நான் வரும் வழியில் சிறுமி ஒருவர் எனக்கு பரிசாக வழங்கினார். அதைப் பார்த்தும் அப்போது உள்ள நினைவுகள் வந்தன. மாணவப் பருவத்திலேயே அண்ணாதுரை கொள்கை மனதில் பதிந்து, நான் சுயமரியாதை காரணாக இப்போது வரை உள்ளேன்.

ஆனால், ஆத்திகருக்கும், பக்தர்களுக்கும் எந்த தீங்கும் விளைவிப்பவன் அல்ல நான். கொள்கை வேறு, நடத்தை வேறு. திருவாரூரில் தேரோட்டம் பற்றி சட்டசபையில் கேட்டபோது, நண்பர் காளிமுத்து திருவாரூரிலே தேரோட்டம் நடைபெறுகிறதா என கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா' என்று பாடினீர்களே. இன்றைக்கு அனுமதிக்கிறீர்களா... இப்போது ஏங்கி தவிக்கவில்லை என்பதால் தேரோட்டம் தேவை என்று கூறினேன்.

மதவாதிகள், ஆத்திகர்கள் கொள்கைகளை எதிர்க்க மாட்டேன் என்று கூறினேன். மக்களிடம் திணிக்காமல் கருத்து கூற வேண்டும் என்பது தான் என்னுடைய வாதம். அதனால் தான், அண்ணாதுரை காலத்திலும் அதன் பிறகு எங்கும் சுய மரியாதை கொள்கையை திணித்து புண்படுத்தவில்லை. ஆட்சி வேறு; கொள்கை வேறு.எதிர்காலத்திலும் புண்படுத்த மாட்டேன். தி.மு.க., கொள்கை கடவுளுக்கு எதிரானதல்ல. கடவுள் வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். கடவுளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதல்ல பிரச்னை. கடவுள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறேனா என்பது தான்.சேது சமுத்திரத் திட்டத்தை ராமருக்கு ஆகாது என கூறி நிறுத்திவிட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், இந்த திட்டத்தை தொடர மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

தி.மு.க., ஏதோ சிலருக்கு பதவிகளுக்காக துவங்கப்பட்ட கழகம் அல்ல. தமிழ் மொழிக்கு பெருமை கிடைப்பதற்காக துவங்கப்பட்டது. திராவிட உணர்வை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டி வருகின்றனர். திராவிடன் என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றில் கூட திராவிடன் என்ற வார்த்தை வருகிறது. இன்று புதியதாக துவங்கப்படும் கட்சிகள் கூட, திராவிட அடைமொழியுடன் துவங்குகின்றனர். திராவிடத்தை மதிக்கின்றனரோ இல்லையோ, நம்மை பழித்து பேசி வருகின்றனர். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அழிவார்களே தவிர இந்த இயக்கம் அழியாது. எச்சரிக்கையாக அல்ல; அறிவுரையாகச் சொல்கிறேன்.

தேர்தலில் போட்டியிருக்க வேண்டும். வெறுப்பின் காரணமாக போட்டியிருக்க கூடாது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், என்னை எதிர்த்து போட்டியிட்டவரை அழைத்து பேசி அரவணைத்து, இந்த தொகுதிக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பேன். நானே ஒரு வேளை முதல்வராகிவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெறுக்க மாட்டேன். அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts