background img

புதிய வரவு

தயாநிதி மாறனுடன் பிரச்சினை இருந்தது உண்மைதான்!-டாடா ஒப்புதல்

டெல்லி: தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கும் தனது நிறுவனத்துக்கும் பிரச்சினை இருந்தது உண்மைதான் என்று பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிடம் (பிஏசி) தெரிவித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

ஆனால் அவரது மீடியா ஒருங்கிணைப்பாளராக இருந்த நீரா ராடியாவோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

மழுப்பினார் ராடியா:

விசாரணையின் போது, பெரும்பாலும் எனக்குத் தெரியாது, எனக்கு மறந்து விட்டது என்று ராடியா மழுப்பலாக பதிலளித்ததாக பிஏசி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். நீரா ராடியாவுடன் அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு மூத்த அதிகாரிகளும் விசாரணைக்கு வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள், தொழில் துறை பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்த கேள்விக்கு, அவற்றில் சில பதிவுகள் உண்மையானவைதான், மேலும் சில போலியானவை என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைப் புகழ்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் குறித்தும் நீரா ராடியாவிடம் பொதுக் கணக்குக் குழு விசாரணையின் போது கேட்டபோது, அதுபற்றி தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக நீரா ராடியா பேசியுள்ளது, ஆ.ராசாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவது குறித்துப் பேசியது ஆகியவற்றைப் பற்றி ராடியாவிடம் பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி விளக்கம் கேட்டார். இதற்கு தெளிவாக பதில் சொல்ல அவர் மறுத்துள்ளார்.

சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக நாடாளுமன்றத்துக்கு சுமார் 11 மணியளவில் வந்தார் நீரா ராடியா. எனினும் ராடியாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் சுமார் 1 மணி நேரம் வரை விவாதித்தனர். அதன் பின்னரே ராடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

தயாநிதி மாறனுடன் பிரச்சினை

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்குப் பின் தொழிலதிபர் ரத்தன் டாடா, பிஏசி முன் ஆஜரானார்.

ஏற்கெனவே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையில் முன்னிலையில் இருக்கும் நிலையில் டாடா நிறுவனம், ஜிஎஸ்எம் முறையிலும் செல்போன் சேவையைத் தொடங்க வேண்டியதன் காரணம் என்ன?

பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு (டாடா) சாதகமாக செய்திகளை வெளியிட்டது போன்றவை தொடர்பாக டாடாவிடம் கேட்கப்பட்டது. இதற்கான அவரது பதில்களை பிஏசி வெளியிடவில்லை.

அதே நேரம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கு பிரச்சினை இருந்ததாக டாடா கூறியுள்ளார். தயாநிதி மாறன் விலகிய, ராசா வந்த பிறகு நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் ராசாவை அமைச்சராக நியமித்ததில் தன்னுடைய பங்கு என்னவென்று கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டாராம்.

மழுப்புகிறார் நீரா - ஜோஷி

இதுகுறித்து பின்னர் பேசிய நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பல உண்மைகளை மறைக்கவே நீரா ராடியா முயல்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

"உண்மைகளைக் கூற வேண்டுமென்ற எண்ணத்தில் இல்லாமல், மழுப்ப வேண்டுமென்ற நோக்கத்திலேயே ராடியாவின் பதில்கள் இருந்தன. "இந்த உரையாடல்களைக் கேட்டதில்லை, எனக்கு சரியாக நினைவில்லை, எனக்குத் தெரியவில்லை' என்றுதான் அவரது பெரும்பாலான பதில்கள் இருந்தன.

எனினும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன்தான் பேசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். எனினும் விசாரணையின் போது நிகழ்ந்த அனைத்தையும் இப்போது கூற முடியாது என்றார் ஜோஷி.

மீண்டும் வருவார் டாடா

ரத்தன் டாடாவிடம் விசாரணை நடத்தியபோது, தெளிவாகவும், நேரடியான பதில்களையும் அளித்தார். பதிவு செய்யப்பட்ட டேப்பில் இருப்பது தனது குரல்தான் என்பதையும் ஒப்புக் கொண்டார். எனினும் சில விஷயங்களை அவர் தெளிவாகக் கூற முடியவில்லை. இன்னும் ஓரிருநாளில் குழுவை மீண்டும் அணுகுவதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்," என்று ஜோஷி மேலும் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts