background img

புதிய வரவு

தி.மு.க.,வினர் பறித்த நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும்: ஜெ.,

வேலூர்: ""தி.மு.க.,வினர் அராஜகமாக கைப்பற்றிய நிலத்தை மீட்டு உரியவர்களுக்கே தருவோம்,'' என, வேலூரில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.

வேலூர், கோட்டை வெளி மைதானத்தில், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்தும், சோளிங்கர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர், கே.வி.குப்பம் தொகுதி இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் செ.கு.தமிழரசனை ஆதரித்தும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழகததில் மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. மின்வெட்டு பெருகி, மின்வெட்டு மாநிலமாக மாறி விட்டது. இதனால், பொருளாதாரம் நலிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இங்கு நடப்பது ஆட்சியே அல்ல; ரவுடி கும்பல் ஆட்சி நடக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.80 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இந்த பணம் அரசுக்கு கிடைத்திருந்தால், நாடு வளமாக மாறியிருக்கும். நீங்களும் வளர்ந்திருப்பீர்கள். கருணாநிதிக்கு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி ஐந்து முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இதனால், கருணாநிதியும், அவரது குடும்பத்தினருக்கும் வயிறு நிரம்பி விட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்து விட்டார். உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடிக்க கருணாநிதிக்கு ஆசை வந்து விட்டது. இந்த நேரத்தில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலில் உங்களது நிலை என்ன?

விலைவாசி உயர்வு வாட்டி எடுக்கிறது. அப்பாவி மக்கள் நிலம் பறிக்கப்படுகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தமிழகத்தை கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் களேபரம் செய்து வருகின்றனர். இதனால், ஆறு கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா? இதை இப்படியே விட்டு விட்டால், இவர்கள் தமிழக மக்களை விரட்டி விட்டு, இவர்கள் குடும்பத்தினர் மட்டுமே ஆள்வர். இந்த தேர்தலை பயன்படுத்தி கருணாநிதி குடும்பத்தை விரட்டி அடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டளிப்பதை ஜனநாயக கடமையாக கருத வேண்டும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சி மலர உங்கள் பேராதரவு வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.

பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுப்போம். வேலூர் மையப்பகுதியில் உள்ள அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனையை மீண்டும் இயங்கச் செய்வோம். புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்வோம். சி.எம்.சி., மருத்துவமனை எதிரில் சுரங்க நடைபாதை அமைப்போம். கொணவட்டத்தில் மேம்பாலம் அமைப்போம். வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய ஏழு தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு, முறையாக அமல்படுத்தப்படும். இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும். கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்பட்டு, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். சொட்டு நீர் பாசன வசதி இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரவுடி கும்பல் தமிழகத்தை அடக்கி ஆள்வதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., கொள்ளையடித்த பணம் மீட்கப்படும். தி.மு.க.,வினர் அராஜகமாக கைப்பற்றிய நிலத்தை மீட்டு, நிலத்துக்குரியவர்களுக்கு தருவோம். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

சென்னையில் இருந்து ஹெலிகாட்டர் மூலம் வேலூர் தொரப்பாடி ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கிய ஜெயலலிதா, அங்கிருந்து வேனில் கோட்டைவெளி மைதானத்திற்கு வந்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts