background img

புதிய வரவு

கருணாநிதி தமிழகத்தையே வீல் சேரில்உட்கார வைத்து விட்டார்: விஜயகாந்த்

ரிஷிவந்தியம்:பின்தங்கிய தொகுதியான ரிஷிவந்தியத்தை, முன்மாதிரியாக மாற்ற தொடர்ந்து போராடுவேன் என, விஜயகாந்த் பேசினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில், விஜயகாந்த் கடந்த நான்கு நாட்களாக தங்கி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட அவர், பல ஊர்களில் பேச முடியாமல் சைகைமூலம் பிரசாரம் செய்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எதிரில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் தன் பிரசாரத்தை முடித்து விஜயகாந்த் பேசியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நான் சொல்லியாக வேண்டும். தொண்டை வலியால் அவதிப்பட்ட என்னை டாக்டர் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருப்பினும் மக்களுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். இதோ சிவனின் எதிரில் நின்று பேசுகிறேன். ரிஷிகளின் வனம் தான் ரிஷிவந்தியம். இது சிவனுக்கு உகந்த இடம்.ஆனால், இத்தொகுதியில் சிவராஜ் செய்வது அட்டூழியமாக உள்ளது. நான் பிரசாரத்திற்காக சென்ற இடமெல்லாம் எந்த சாலையும் சரியில்லை. ஐந்து முறை சிவராஜ் எம்.எல்.ஏ., என்று கூறுகிறார்களே இந்த தொகுதிக்காக என்ன செய்தார்?ரிஷிவந்தியத்தை முன்மாதிரியாக மாற்றுவதற்காகவே போட்டியிடுகிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல் இரவுநேரத்தில் வந்து 500 ரூபாய் தந்து ஓட்டுகேட்கும் நிலையில் சிவராஜ் உள்ளார்.

காங்., கட்சி கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ளதே, உருப்பட முடியுமா; வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தையே வீல்சேரில் கருணாநிதி உட்கார வைத்து விட்டார். ஊழல் செய்வதற்கு மட்டும் அவருக்கு உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நான் பேசுபவன். வழவழ கொழகொழவென்று பேசப்பிடிக்காது. எனக்கு மூன்று ஆண்டுகள், "டைம்' கொடுங்கள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பாலம், ஆர்கவாடி பாலம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி காட்டுகிறேன்.சனி என்பது கருணாநிதி, பிணி என்பது ஸ்டாலின். இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவேன். காடுவெட்டி குரு என்றால் எனக்கு பயமா; யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் காலில் விழுகிறேன் என்று கூறினார். ஏன், இத்தனை நாள் செய்த சாதனைகள் எடுபடவில்லையா? நேற்று முன்தினம் 200 ரூபாய், நேற்று 500 ரூபாய் என்று ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது.பெரியாரை பற்றி பேசும் கருணாநிதி, தனது தோளில் உள்ள மஞ்சள் துண்டு, சிவப்பு கல் மோதிரத்தை கழட்டி போடுவாரா?சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஊராக ரிஷிவந்தியம் உள்ளது. மூன்று பாலம், இணைப்பு சாலை, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி இவைகளை செய்துவிட்டுத்தான் அனைத்து கிராமத்திற்கும் நான் வருவேன்.அத்தியாவசியப் பொருட்களை பார்த்து பார்த்து நாம் வாங்குகிறோம், வாழ்க்கைக்கு உபயோகப்படும் கட்சியை கவனமுடன் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டாமா? இந்த தொகுதியை முன்னேற்ற உங்களின் ஆதரவை தர வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.மாலை 4.38 மணிக்கு தனது பேச்சை முடித்துக் கொண்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts