background img

புதிய வரவு

சென்னை அணி "திரில்' வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts