background img

புதிய வரவு

மலிங்கா வேகத்தில் சரிந்தது சேவக் அணி! *சச்சின் அணி அசத்தல் வெற்றி

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சில் மிரட்டிய மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் சொதப்பிய சேவக்கின் டில்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், பேட்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சித் துவக்கம்:
டில்லி அணிக்கு சேவக், வார்னர் துவக்கம் கொடுத்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து அதிரடியை துவக்கினார் சேவக். ஆனால் அடுத்து மலிங்காவின் ஓவரில் எல்லாமே தலைகீழானது. இவரது வேகத்தில் இரண்டாவது பந்தில் வார்னர் (1) போல்டானார். பின் நான்காவது பந்தில் சந்த்தையும் (0) போல்டாக்கினார்.
சேவக் ஏமாற்றம்:
இருப்பினும் சேவக், அவ்வப்போது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். இவர் 19 ரன் எடுத்திருந்த போது, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த நமன் ஓஜா, முனாப் படேல் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுமுனையில் பின்ச்சை (8), ஹர்பஜன் தனது சுழலில் வெளியேற்றினார்.
மலிங்கா அபாரம்:
சற்று தாக்குப்பிடித்த ஓஜா, 29 ரன்கள் எடுத்து திரும்பினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான், "டக்' அவுட்டானார். அதன்பின் மலிங்கா மீண்டும் மிரட்டத் துவங்கினார். இம்முறை முதலில் வேணுகோபால் ராவை (26), போல்டாக்கிய மலிங்கா, அதே ஓவரில் மார்கலையும் போல்டாக்கி அதிர்ச்சி தந்தார். கடைசியாக வந்த டிண்டாவும், மலிங்கா வேகத்தில் சிக்கினார்.
டில்லி டேர்டெவில்ஸ் அணி 17.4 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணியின் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். ஹர்பஜன் தன்பங்கிற்கு 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஜேக்கப்ஸ் ஏமாற்றம்:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் சச்சின், ஜேக்கப்ஸ் துவக்கம் தந்தனர். ஜேக்கப்ஸ் ஒரு ரன்னில் அவுட்டானார். அம்பாதி ராயுடு (14) விரைவில் அவுட்டானார்.
சச்சின் அபாரம்:
பின் சச்சினுடன் ரோகித் சர்மா இணைந்தார். இந்த ஜோடி பதட்டமில்லாமல் ரன் சேர்த்தது. இதனிடையே மார்கல் ஓவரில், 3 பவுண்டரி அடித்து அதிரடிக்கு மாறினார் ரோகித் சர்மா. மறுபுறம் மெர்வி பந்தில், சச்சின் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்தினார். இர்பான் பதான் பந்தில், சச்சின் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.
சச்சின் (46), ரோகித் சர்மா (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை மலிங்கா தட்டிச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் அணி, தனது இரண்டாவது போட்டியில் நாளை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது.

இன்று "ஹீரோ'
கடந்த வாரம் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான, உலக கோப்பை பைனலில் இலங்கையின் மலிங்கா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். துவக்கத்தில் சேவக், சச்சினை அவுட்டாக்கி, மும்பை ரசிகர்களின் "வில்லனாக' மாறினார். நேற்று டில்லி அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை ரசிகர்களின் "ஹீரோ'வாக அசத்தினார்.

ஸ்கோர்போர்டு
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர்(ப)மலிங்கா 1(3)
சேவக்-ரன் அவுட்(சச்சின்) 19(16)
சந்த்(ப)மலிங்கா 0(2)
பின்ச்(கே)ராயுடு(ப)ஹர்பஜன் 8(12)
ஓஜா(கே)மலிங்கா(ப)முர்டசா 29(30)
வேணுகோபால்(ப)மலிங்கா 26(25)
இர்பான்-ரன் அவுட்(சதீஷ்/ஜேக்கப்ஸ்) 0(1)
வான் டர் மெர்வி-அவுட் இல்லை- 8(6)
மார்கல்(ப)மலிங்கா 0(2)
யாதவ்(ஸ்டம்டு)ஜேக்கப்ஸ்(ப)ஹர்பஜன் 0(4)
டிண்டா(கே)பிராங்க்ளின்(ப)மலிங்கா 0(5)
உதிரிகள் 4
மொத்தம் (17.4 ஓவரில் ஆல் அவுட்) 95
விக்கெட் வீழ்ச்சி: 1-11(வார்னர்), 2-11(சந்த்), 3-27(சேவக்), 4-40(பின்ச்), 5-82(ஓஜா), 6-82(இர்பான்), 7-88(வேணுகோபால்), 8-88(மார்கல்), 9-90(யாதவ்), 10-95(டிண்டா).
பந்துவீச்சு: ஹர்பஜன் 3-0-14-2, மலிங்கா 3.4-1-13-5, முர்டசா 4-0-21-1, முனாப் படேல் 3-0-20-0, போலார்டு 3-0-18-0, பிராங்க்ளின் 1-0-9-0.
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ்(ப)மார்கல் 1(6)
சச்சின்--அவுட் இல்லை- 46(50)
ராயுடு-ரன் அவுட்(வான் டர் மெர்வி) 14(15)
ரோகித்-அவுட் இல்லை- 27(30)
உதிரிகள் 11
மொத்தம் (16.5 ஓவரில் 2 விக்.,) 99
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஜேக்கப்ஸ்), 2-31(ராயுடு).
பந்து வீச்சு: டிண்டா 2-0-7-0, மார்கல் 4-0-29-1, இர்பான் பதான் 2.5-0-14-0, யாதவ் 2-0-16-0, வான் டர் மெர்வி 4-0-16-0, பின்ச் 2-0-13-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts