background img

புதிய வரவு

பிரசாரத்தின்போது சரத்குமார் பெயரைச் சொல்லாமல் விட்ட ஜெ.

அம்பாசமுத்திரம் : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தென்காசி தொகுதி வேட்பாளரான நடிகர் சரத்குமார் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜெயலலிதா இன்று பிற்பகல் அம்பாசமுத்திரத்தில் பிரசாரம் செய்தார். அங்குள்ள வடக்கு ரத வீதியில் வேனை நிறுத்தி வேனுக்குள்ளிருந்து ஹைட்ராலிக் முறையில் சீட்டுடன் ஜெயலலிதா மேலே வந்தார். பின்னர் கண்ணாடிக் குடைக்குள் இருந்தபடி அவர் ஏற்கனவே எழுதி வைத்திருந்ததைப் பார்த்து வாசித்தார்.

பேச்சை முடிக்கும்போது அவர் நெல்லை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி வாக்கு கேட்டார்.

மொத்தம் போட்டியிடும் 6 தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரைச் சொன்ன ஜெயலலிதா, தென்காசியில் போட்டியிடும் சரத்குமாரின் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார். இதனால் ஆச்சரியமடைந்த சரத்குமார், ஜெயலலிதாவின் முகத்தை திரும்பத் திரும்ப தவிப்புடன் பார்த்தார்.

அதன் பின்னரே சரத் பெயரைச் சொல்லாமல் விட்டு விட்டதை உணர்ந்த ஜெயலலிதா, அவரது பெயரைச் சொல்லி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரமாண்ட கூட்டம்

ஜெயலலிதாவின் பிரசாரத்தைப் பார்க்கவும், கேட்கவும் அம்பாசமுத்திரத்தில் பிரமாண்டக் கூட்டம் கூடி விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டர் ஹெலிபேடில் இறங்கியபோது அவரை சந்திக்க முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முருகையா பாண்டியனைப் பார்த்த ஜெயலலிதா அவரிடம் மட்டும் சால்வை வாங்கிக் கொண்டு வணக்கம் வைத்துச் சென்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts