background img

புதிய வரவு

மீனவர்களுக்கு 4,500 ரூபாய் உதவி தொகை : வைகோ கோரிக்கை

சென்னை : "மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில், மீனவர்களுக்கு, 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், 45 நாட்கள், மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில், மீனவர்களுக்கு நன்மை இருப்பினும், இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது. இருப்பினும் கட்டுமரம், பைபர் படகு மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிட்டாலும், கோடை காலங்களில் திடீரென ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். கடலில், 45 நாட்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.
ஆண்டின், 365 நாட்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக் காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் போக மீதம் 150 நாட்கள் தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். 45 நாட்கள் மீன்பிடி தடை காலத்தில், அரசு தரும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலத்துக்குப் போதுமானதாக இல்லை.
குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு, உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என, கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றமடைகின்றனர். இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம், நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வழங்குவதைப் போன்று, மீனவர்களை பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம், 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts