background img

புதிய வரவு

அ.தி.மு.க., ஜெயித்தால் சட்டத்தின் ஆட்சி: மதுரையில் ஜெயலலிதா உறுதி

மதுரை:""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்,'' என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என, கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாகத் திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையைச் சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்; குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு களையப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மதுரையில் இன்றும் ஜெ., பிரசாரம் : மதுரை ஆறாவது சிறப்பு காவல்படையில் இருந்து ஜெ., இன்று காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தேனி செல்கிறார்.தேனி, திண்டுக்கல், நத்தத்தில் பிரசாரம் செய்து விட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். மாலை 4 மணிக்கு அய்யர் பங்களாவில், புறநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அழுக்கான "ஷாமியானா' ஜெ., கண்ணில் படவில்லை

* ஜெ., வரும் பாதையில் வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை தேர்தல்பார்வையாளர்கள் அகற்ற உத்தரவிட்டதால் உடனே அகற்றினர்.
* அம்பாசமுத்திரத்தில் இருந்து, மதுரை சிறப்புபட்டாலியன் படை மைதானத்திற்கு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஜெ., வருகையை முன்னிட்டு பாத்திமா கல்லூரி சந்திப்பு, அரசரடி சந்திப்பு, காளவாசல் சந்திப்புபகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
* காளவாசல் சந்திப்பிற்கு மாலை 4.47 மணிக்கு ஜெ.,வந்தார். மாலை 4.50 மணிக்கு பேச துவங்கி 5.10க்கு முடித்தார்.
* பிரசார வேன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், "இப்ப விழுமோ... எப்ப விழுமோ...' என்றநிலையில் அழுக்கு படிந்த "ஷாமியானா' அமைக்கப்பட்டிருந்தது. இதை, "ஜெ., பார்த்திருந்தால், பார்வையாலே சுட்டு எரித்திருப்பார்,' என, தொண்டர்கள் குமுறினர்.
* வலதுபக்க மேடையில் வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ(அ.தி.மு.க.,), சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.,) , அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), கதிரவன்(பா.பி.,) நின்றிருந்தனர். கூட்ட நெரிசலால் வேட்பாளர்களின் மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். இதனால், வேட்பாளர்களை ஜெ., அறிமுகம் செய்துவைத்தாலும், வேட்பாளர்களின் தலைகள் தென்படவில்லை.
* "குடி'மகன்கள் கும்மாளம் அடித்து விடக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்த இடத்திற்கு எதிரே இருந்த 2 டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் அடைக்கப்பட்டன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts