background img

புதிய வரவு

அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது: ஜெயலலிதா உறுதி

சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.

தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.

வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts