background img

புதிய வரவு

விடைபெறுகிறார் கிறிஸ்டன்!

மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து, இனிமையான நினைவுகளுடன் விடைபெறுகிறார் கிறிஸ்டன்.
தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரரான கிறிஸ்டன், கடந்த 2008ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் பட்டை தீட்டப்பட்ட இந்திய அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை பெற்றது. சமீபத்தில் உலக கோப்பையை வென்று அசத்தியது. உலக கோப்பை தொடருடன் இவரது பயிற்சிக்காலம் முடிகிறது. இந்திய அணியில் தொடர வேண்டும் என, சச்சின், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த கிறிஸ்டன் அளித்த பேட்டி:
இந்திய அணியில் பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டனர். ஆனால் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதால், இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். எனது 4, 7 வயதில் உள்ள இரு மகன்களும், தந்தையை கொஞ்சமாவது காண வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏற்கனவே கடந்த மூன்றாண்டுகளாக, அவர்களை விட்டு பிரிந்து அதிக தியாகம் செய்துவிட்டேன். இதனால் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகும் திட்டம் இல்லை.
ஒற்றுமைக்கு வெற்றி:
உலக கோப்பை வெல்வது என்பது எளிதானதல்ல. கடைசி 3 "நாக் அவுட்' போட்டிகளிலும் வெற்றிபெற்றது, எந்த ஒரு தனிப்பட்ட வீரராலும் அல்ல. ஒட்டுமொத்த அணியினர் இணைந்து, செயல்பட்டதுக்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற திறமையைத் தான் நான் எதிர்பார்த்தேன்.
வலுவான அணி:
தற்போது இந்திய கிரிக்கெட் வலுவான நிலையில் உள்ளது. இதைக்கொண்டு இன்னும் நீண்ட காலத்துக்கு சிறப்பாக செயல்படலாம். வேகப்பந்து வீச்சில் மட்டும் சற்று தொய்வு உள்ளது.
அணியின் அடிப்படை வலுவாக இருக்கும் நிலையில், புதிதாக வரும் பயிற்சியாளர் இன்னும் சில புதிய ஆலோசனைகளைக் கொண்டு வரலாம். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக செய்த பணியில், உடனடியாக எவ்வித மாற்றத்தையும், புதிய பயிற்சியாளர் கொண்டுவரத் தேவையில்லை.
கோஹ்லிக்கு பாராட்டு:
இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, பெரிய போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இவர் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கத் தயாராகி விட்டார். அதேபோல ரெய்னாவும், அபூர்வமான திறமை கொண்டவர். புஜாரா எதிர்காலத்தில் சிறந்த டெஸ்ட் வீரராக வருவார். பிரக்யான் ஓஜா இன்னும் சற்று கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரில் முனாப் படேல், ஆஷிஸ் நெஹ்ரா சிறப்பாக செயல்பட்டனர். தற்போதைய நிலையில் ஜாகிர் கான் தான், உலகின் சிறந்த மிதவேக பந்து வீச்சாளர். நெருக்கடியான நிலையில் அசத்தும் இவர்தான் "நம்பர்-1' பவுலர். இவருக்கு, நல்ல "பார்ட்னர்' தேவைப்படுகிறது.
சாதித்த யுவராஜ்:
உலக கோப்பை தொடருக்காக பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் கடின பயிற்சி செய்தார் யுவராஜ் சிங். கடைசியில் தொடர் நாயகன் விருது வென்றதை நினைத்து உண்மையில் பெருமைப்படுகிறேன். ஸ்ரீசாந்த் உண்மையில் சிறந்த பவுலர். கடைசியாக பங்கேற்ற ஏழு டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் எங்களுக்கு முக்கிய ஆயுதம். அவர் தனது திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, கிரிக்கெட்டின் அடுத்த "லெவலுக்கு' செல்ல வேண்டும்.
ரசிகர்களுக்கு பாராட்டு:
இந்தியாவில் பணியாற்றியது வியக்கத்தக்கதாக இருந்தது. இந்திய மக்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கின்றனர், என்மீது எந்தளவுக்கு பாசம் வைத்துள்ளனர் என்பதைப் பார்க்கும் போது, ஆச்சரியமாக இருந்தது. இங்கு எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்.
---
ஐ.பி.எல்., பயிற்சியாளர்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி தென் ஆப்ரிக்கா செல்லும் கிறிஸ்டன் கூறுகையில்,""இப்போது தென் ஆப்ரிக்கா செல்லும் நான், மீண்டும் இந்தியா வருவது குறித்து யோசிப்பேன். ஏதாவது ஒரு ஐ.பி.எல்., அணியில் பயிற்சியாளராகும் திட்டம் உள்ளது. ஆனால் இது எப்போது நடக்கும் என்றுமட்டும் தெரியாது,'' என்றார்.
---
இந்தியாவுக்கு ஆதரவு
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி குறித்து கிறிஸ்டன் கூறுகையில்,"" தென் ஆப்ரிக்கா எனது தேசம். உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த போது, மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர்கள் காலிறுதியில் அடைந்த தோல்வி, எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது. தென் ஆப்ரிக்க அணியுடன் பல முறை விளையாடி இருந்தாலும், எனது இதயம் 100 சதவீதம் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் இருக்கும்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts