background img

புதிய வரவு

சிறந்த கேப்டன் தோனி *சச்சின் புகழாரம்

மும்பை: ""தோனி சிறந்த கேப்டன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் புகழாரம் சூட்டினார்.
சமீபத்தில் இந்திய துணைக் கண்டத்தில் நடந்த பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடிய, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
இந்திய வீரர் சச்சின் கூறியதாவது: நான் இடம் பெற்றிருந்த அணிகளில், தோனி தலைமையிலான இந்திய அணியை சிறந்ததாக கருதுகிறேன். உண்மையிலேயே தோனி சிறந்த கேப்டன். இவர், போட்டியின் போது தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பார். ஆட்டத்தின் போக்கை அறிந்து கொண்டு, சீனியர் வீரர்களிடம் ஆலோசிப்பார். தவிர, பேட்ஸ்மேன், பவுலர்களிடமும் தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை நடத்துவார். எப்போதும் அமைதியாக இருப்பது, இவரது சிறப்பம்சம். நெருக்கடி இல்லாமல், தோல்வி பயமின்றி விளையாடுவது இவருக்கு கூடுதல் பலம்.
"பவுலிங் மெஷின்':
இம்முறை இந்திய அணி உலக கோப்பை வென்றதில் பெரும் பங்கு, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை சேரும். இவரது வருகைக்கு பின், அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு வீரரின் திறமையை அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்குவது இவரது சிறப்பு. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் 200 முதல் 300 பந்துகள் வீசுவார். உண்மையிலேயே இவரை "பவுலிங் மெஷின்' என்று கூறலாம். இவர், அணியை விட்டு விலக இருப்பது வருத்தமான விஷயம். சில காலம் இவர் அணியில் நீடித்தால் நன்றாக இருக்கும். இவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம்.
சிறந்த நாள்:
இந்திய அணி உலக கோப்பை வென்ற, ஏப்.2ம் தேதியை வாழ்நாளின் சிறந்த நாளாக கருதுகிறேன். இதுபோன்ற தருணத்தை அளித்த கடவுளுக்கு நன்றி.
இம்முறை, உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பே, இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் போட்டியின் போது நெருக்கடி இருக்கத்தான் செய்தது. இதை வீரர்கள் எளிதாக சமாளித்து, கோப்பையை கைப்பற்றினர். பைனலில், ஒவ்வொரு வீரரரும் கடமை அறிந்து செயல்பட்டது வெற்றிக்கு கூடுதல் பலம்.
இதுவே முதன்முறை:
சக வீரர்கள், என்னை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தது இதுவே முதன்முறை. அப்போது எனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் எழும்பியது. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக சக வீரர்களுக்கு எனது நன்றி.
உலக கோப்பை தொடருக்காக, தென் ஆப்ரிக்க தொடரில் இருந்தே பயிற்சி எடுத்தோம். இருப்பினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டது பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமில்தான். இது நல்ல பலன் அளித்தது.
இவ்வாறு சச்சின் கூறினார்.

ஓய்வு எப்போது?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சச்சின் கூறுகையில், ""தற்போதைக்கு, ஓய்வு எண்ணம் என் மனதில் தோன்றவில்லை. ஓய்வு பெற விரும்பினால், அன்றைய தினம் வெளிப்படையாக அறிவித்து விடுவேன். தற்போது என் கவனம் முழுவதும் உலக கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts