background img

புதிய வரவு

இந்தியா மட்டும் தோற்றிருந்தால் என்னை வறுத்தெடுத்திருப்பார்கள்-டோணி

மும்பை: ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா மட்டும் தோற்றிருந்தால், என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.

கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த கேப்டனாக உருவெடுத்து விட்டார் டோணி. கங்குலியால் வென்று தர முடியாமல் போன உலகக் கோப்பையை டோணி வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியின்போது டோணியின் சில முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அத்தோடு மட்டுமல்லாமல், தப்பு செய்கிறாரே டோணி என்ற விமர்சனமும் கூட எழுந்தது. ஆனால் இந்தியா பெற்ற வெற்றியும், டோணி ஆடிய ஆட்டமும் அத்தனையையும் துடைத்துப் போட்டு விட்டது.

இருந்தாலும் தன்னை நோக்கி எழுந்த, விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்த ஏவுகணைகள் குறித்து டோணியும் அறிந்தே வைத்திருந்தார் போலும். போட்டியின் முடிவில் இதுகுறித்து அவரே குறிப்பிட்டார்.

டோணி கூறுகையில், இன்றைய போட்டி எனக்கு மிகக் கடுமையான ஒன்று. போட்டித் தொடர் முழுவதும் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி வந்தார். நல்ல பார்மிலும் அவர் உள்ளார். இந்த நிலையில் அவருக்குப் பதில் நான் களம் இறங்கியது பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்.

ஒருவேளை எனது முடிவு தவறாகப் போயிருந்தால், நான் சரியாக ஆடாமல் போயிருந்தால் நிச்சயம் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் எடுத்த முடிவு சரியானதே. எனது முடிவை கிர்ஸ்ட்னும் கூட ஆதரித்தார். ஒரு வேளை நான் முன்னரே பேட் செய்யாமல் போயிருந்தால் அடுத்தடுத்து இடது கை வீரர்களாக மாறியிருக்கும். கம்பீர், யுவராஜ், சுரேஷ் ரெய்னா என தொடர்ந்து இடது கை ஆட்டக்காரர்களாக களம் இறங்கியிருப்பார்கள். அது பெரிய ரிஸ்க்காகவும் மாறியிருக்கும்.

மேலும், இலங்கை அப்போது ஸ்பின்னர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும் என கருதி அந்த முடிவை எடுத்தேன். அது சரியானதாகவே இருந்தது.

அதேபோல இன்னும் கூட நிறைய கேள்விகளுடன் பலரும் காத்திருந்தனர். ஏன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஏன் ஸ்ரீசாந்த்தை சேர்த்தீர்கள் என்பது போல பல கேள்விகள் உள்ளன. ஆனால் நாம் கோப்பையை வென்று விட்டோம். எனவே இந்த கேள்விகளுக்கு இப்போது இடமில்லை என்று நான் கருதுகிறேன்.

முரளிதரனின் பந்து வீச்சை நான் வெற்றிகரமாக சந்தித்தேன். நான் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பெற்றிருந்த முரளிதரனுடன் விளையாடியது உபயோகமாக இருந்தது. அவரது தூஸ்ரா வித்தைகளை நெருக்கமாக இருந்து பார்க்க முடிந்தது. அவரது பந்து வீச்சின் ரகசியத்தையும் அறிய முடிந்தது. எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். எனவேதான் இறுதிப் போட்டியில் அவரது பந்துகளை என்னால் எளிதில் அடிக்க முடிந்தது.

நானும் கம்பீரும் சேர்ந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து ஆடினோம், நிலைத்து ஆடினோம், சிறப்பாக ஆடினோம். ரிஸ்க்கான ஷாட்கள் வேண்டாம் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஆடினோம். அதற்கு நல்ல பலன் இருந்தது என்றார் டோணி.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts