background img

புதிய வரவு

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ.,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி வாக்களிப்பு : சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளி ஓட்டுச்சாவடியில் முதல்வர் கருணாநிதி ஓட்டு போட்டார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts