background img

புதிய வரவு

20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு : மியான்மரில் பார்லிமென்ட் கூடியது

நேபீட்டா : மியான்மர் வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முறையாக பார்லிமென்டின் இரு அவைகளும் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், நாடு முழுவதும் நேற்று 14 மாகாண சட்டசபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மரில் 1962ல் இருந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அவுங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில், ராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி(யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முதலாக அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டம் துவங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில் நேற்று காலை துவங்கின. பெரும்பான்மையான இடங்களில் யு.எஸ்.டி.பி., கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். அவுங் சான் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கேமரா, மொபைல் போன், கணினிகள், டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் பொருட்களை பார்லிக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பார்லியின் இந்த முதல் கூட்டம், இரண்டு வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் 14 மாகாண சட்டசபைகளும் நேற்று முதன் முறையாகக் கூடின. அவற்றிலும் பெரும்பான்மை உறுப்பினர்களாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இடம் பெற்றனர்.
சூச்சி கட்சி இணையதளம் துவக்கம்: இதற்கிடையில், சூச்சி தன் கட்சியின் www.nldburma.org என்ற இணையதளத்தை நேற்று துவக்கி வைத்தார். "உலக மலர்ச்சிக்கான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு நம்மிடையே தகவல் தொடர்பு அவசியம். மிக விரைவில் நாம் ஜனநாயகத்தை அடைவோம் என்று நான் நம்புகிறேன்' என இந்த இணையதளத்தில் அவர் எழுதியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts