background img

புதிய வரவு

நகராட்சியை கண்டித்து மேட்டூரில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


மேட்டூர் நகராட்சியில், அங்கு மக்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படுவதில்லை. நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சாக்கடைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும், பல இடங்களில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், சாக்கடை மற்றும் கழிவுநீர் சாலைகளின் வழியாக காவிரி ஆற்றில் கலந்துவிடுவதன் காரணமாக காவிரி ஆறு மாசுபடுகிறது என்றும், இதன் காரணமாக, கொசுக்கள் மூலம் பலவித மர்ம நோய்கள் பரவும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


நகராட்சிக்கு சொந்த மான இடுகாடு பொதுக் கழிப்பிடமாக காட்சி அளிப்பதாகவும், பாதாள சாக்கடைத் திட்டம் இன்னமும் அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. மேலும், மேட்டூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை போதுமான மருத்துவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மருந்துகள் இன்றி சீரழிந்து கிடப்பதாகவும், மேட்டூர் 16 கண் பாலத்தில் பேருந்து போக்குவரத்தை தடை செய்த தன் காரணமாக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.


நகராட்சி பண்ணையில் விளையும் சீமைத் தட்டை ஏலம் விடப்பட்டதில் கடந்த காலங்களை விட மிகக் குறைந்த அளவே நகராட் சிக்கு வருமானம் வந்துள்ளதாகவும், நகராட்சியால் விடப்படும் அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும் முறை கேடுகள் முழுவீச்சில் நடை பெறுவதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்காமல், காசு வாங்கிக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றும், இரண்டு ஆண்டுகளாகியும், நகராட்சி ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதம் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், நகராட்சியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வைப்பு நிதி வழங்கப்படவில்லை என்றும் நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, மேட்டூர் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்கு காரணமான நகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சேலம் புற நகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமையிலும், சேலம் புற நகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையிலும் நடைபெறும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts