புதுடில்லி:இந்திய ஆண்களில் பெரும்பாலானோர், வேலைக்கு போகும் பெண்களையே திருமணம் செய்ய விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பெற்றோரால் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில், பெரும்பாலான ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றனர் என்பது குறித்து இணையதளம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், பெரும் பாலான ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவதாக தெரிய வந்துள்ளது.அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில், மணமகன்கள், நிலையான மற்றும் குறைந்த சுமையுள்ள பணிக்கு செல்லும் பெண்களை விரும்புகின்றனர்.அதே நேரத்தில், அவர்கள் குடும்பத்தையும் சரியாக கவனித்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த ஆய்வில் பங்கெடுத்த 69 சதவீத மண மகன்கள், தங்களுக்கு மனிதவளம் மற்றும் நிர்வாகப் பணிகளில் இருக்கும் பெண்கள் மனைவியாக வர வேண்டும் என்று தெரிவித்தனர்.அடுத்ததாக, 62 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணிபுரியும் பெண்களை விரும்புவதாக தெரிவித்தனர். மூன்றாவதாக, "டிவி' சேனல்களில் தொகுப்பாளர்களாக பணிபுரியும் பெண்களையும், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளையும் திருமணம் செய்ய விரும்புவதாக, 56 சதவீதம் பேர் தெரிவித்தனர். 44 சதவீதம் பேர் வங்கியில் பணிபுரியும் பெண்களையும், 38 சதவீதம் பேர் மருத்துவத் துறையில் பணிபுரியும் பெண்களையும் விரும்புவதாக தெரிவித்தனர். நுகர்வோர் சேவை துறையில் பணிபுரியும் பெண்களை விரும்புவதாக, 25 சதவீதம் பேர் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும், பொதுவான எதிர்பார்ப்பு, மணப்பெண்கள் வேலைக்கு போவதுடன், குடும்பத்தையும் நல்ல முறையில் கவனித்து கொள்ள வேண்டும் என்பதாகும்.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment