திமுகவின் முதன்மை மேடைப் பேச்சாளர் வெற்றிகொண்டான் நேற்று மரணமடைந்தார். அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கவிதை அஞ்சலி:
காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து
கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த
சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது
ஆம்; நமது வெற்றிகொண்டானை
சாவு பற்றிக் கொண்டு விட்டது
தம்பீ வெற்றி,
உன்னைத் தோள் மீது
தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு
தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும்
அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து
எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்?
அன்பைப் பிழிந்து கொடுக்க
உன் அண்ணன் நானிருக்க
ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள்
உன் வருகைக்காக காத்திருக்க
வண்ணமிகு சொல்லடுக்கால்
சுயமரியாதை எண்ணங்களை
தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி
தொகை தொகையாய் பகை வீழ்த்தும்
போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே
சொல்லழகைக் கணையாக பூட்டி
மேடையில் நிமிர்ந்து நிற்கும்
உன் வில்லழகைக் கண்டு
நான் வியந்து போற்றிய
காலமெல்லாம் இனி வீண்தானோ?
வார்த்தை சித்தனே
வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே
எம் உயிரெல்லாம் நடுநடுங்க
எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்?
நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்
நான் நம்பவில்லை
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
உன் எக்காளக் குரல்
எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது
மறைந்துவிட்டாய் நீ என்பது
நம்ப முடியாத வார்த்தைக் கோவை
இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு
அண்ணாவோடு
அவர்தம் தம்பியராம் எங்களோடு
சென்னையில் மரணம்:
71 வயதான வெற்றிகொண்டான் சென்னையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று இரவு எழு மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
வெற்றிகொண்டானுக்கு ராஜாமணி என்ற மனைவியும், உதயசூரியன், கருணாநிதி என்ற மகன்களும், ராணி என்ற மகளும் உள்ளனர்.
வெற்றிகொண்டான் மறைவுச் செய்தி கேட்டதும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் விரைந்து சென்று உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜெயங்கொண்டத்தில் இறுதிச் சடங்குகள்:
வெற்றிகொண்டானின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன.
சிறந்த பேச்சாளரான வெற்றிகொண்டான், திமுக மேடைகளை அனல் பறக்க வைத்துக் கொண்டிருந்தவர். அதிமுகவையும், ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சிப்பவர். மிகத் தீவிரமான கருணாநிதி பக்தர்.
திமுகவிலிருந்து வைகோ வெளியேறியபோது அவரை கடுமையாக விமர்சித்து மேடை தோறும் பேசினார். இதனால் திமுகவினர் வைகோ என்ற இழப்பை மறந்து, வெகோ என்று வெற்றிகொண்டானை அழைக்கும் அளவுக்கு அவரது பேச்சுக்கள் அப்போது இருந்தன.
சூடான பதிலடிக்குப் பெயர் போனவர்:
முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து அதிமுக தரப்பிலோ அல்லது பிறரோ பேசும்போது அதற்கு உடனுக்குடன் சூடான பதிலடிகளை திமுக மேடைகளில் அளிப்பார் வெற்றிகொண்டான். மிகவும் எளிமையானவர், சிபாரிசுக்காக கட்சித் தலைமையை அணுகாதவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
சிறந்த பேச்சாளரான இவர், ஒருமுறை திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியதை கேட்ட முதல்வர் கருணாநிதி தமது நிறைவு உரையில், வெற்றி கொண்டான் என்னைப் பேச்சிலே வெற்றி கொண்டான் என்று புகழாரம் சூட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம், காரையூரில் 1929-ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் கணேசன். பள்ளிப்படிப்பை தொடக்கத்திலேயே முடித்துக் கொண்டு பெற்றோருக்கு துணையாக காபித் தூள் வணிகத்தில் ஈடுபட்டார். அண்ணாவின் மேடைப் பேச்சும், கருணாநிதியின் தமிழ் பேச்சும் இவரை பெரிதும் கவர்ந்தது. அதன் விளைவாக தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றினார்.
தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெற்றிகொண்டானுக்கு திமுக சார்பில் வழங்கப்படும் கலைஞர் விருது கடந்த 1992ம் ஆண்டு வழங்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் போட்டியும், நெருக்குதலும் அதிகமாக இருந்து வரும் நிலையில், வெற்றிகொண்டானின் இந்த திடீர் மரணம் திமுகவுக்கு நிச்சயம் பேரிழப்புதான்
0 comments :
Post a Comment